jaiswal cricinfo
கிரிக்கெட்

"இந்தியா புதிய வீரேந்திர சேவாக்கை கண்டுபிடித்துள்ளது"-ஜெய்ஸ்வாலை புகழ்ந்த முன். இங்கிலாந்து கேப்டன்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கை போல், பந்துகளை சிதறடிக்கும் ஒரு வீரரை இந்தியா கண்டுபிடித்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் புகழ்ந்துள்ளார்.

Rishan Vengai

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இரட்டை சதம் விளாசி 214* ரன்களுடன் அவுட்டாகாமல் போட்டியை முடித்தார். இங்கிலாந்தின் ப்ரைம் பவுலரான ஜேமி ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்ட அவர், 14 பவுண்டரிகள் 12 சிக்சர்களுடன் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக (22) சிக்சர்களை பதிவுசெய்த முதல் சர்வதேச வீரராக மாறினார். அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இது இரண்டாவது இரட்டை சதமாகும்.

அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதமடித்த பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வாலை வீரேந்திர சேவாக்குடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன்.

இந்தியா புதிய சேவாக்கை கண்டுபிடித்துள்ளது! - மைக்கேல் வாகன்

அதிரடிக்கு பெயர் போனவரான வீரேந்திர சேவாக் அரைசதம், சதம், இரட்டை சதம் மற்றும் முச்சதமாக இருந்தாலும் அதை பவுண்டரி மற்றும் சிக்சருடன் அடிப்பதில் பெயர் போனவர். எந்த பந்துவீச்சாளருக்கு எதிராகவும் அதிரடியாக ஆடக்கூடிய சேவாக்கை போலவே, தற்போது யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஒரு பயமில்லாத கிரிக்கெட் வீரராக ஜொலித்து வருகிறார்.

வெறும் 13 இன்னிங்ஸ்களில் 2 இரட்டைசதம், 1 சதம் மற்றும் 3 அரைசதங்களை அடித்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் ரெக்கார்டில் வீரேந்திர சேவாக்கின் சராசரியை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்நிலையில் தான் ஜெய்ஸ்வாலை புதிய விரேந்திர சேவாக் என பாராட்டியுள்ளார் மைக்கேல் வாகன்.

jaiswal

ஜெய்ஸ்வால் குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் வாகன், “இந்தியாவுக்கு புதிய வீரேந்திர சேவாக் கிடைத்துள்ளார் (சேவாக் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை டேக் செய்து); ஒரு காலத்தில் சேவாக் செய்ததைப் போலவே அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிரடி ஆட்டம் மூலம் பந்துகளை சிதறடிக்கும் ஒரு வீரராக ஜெய்ஸ்வால் இருக்கிறார்” என புகழ்ந்து கூறியுள்ளார்.

jaiswal

இதற்கு மற்றொரு இங்கிலாந்து ஜாம்பவான் கிரிக்கெட்டரான கெவின் பீட்டர்சன், “இந்திய கண்டிசனில் ஒரு பலவீனத்தை கூட ஜெய்ஸ்வாலிடம் பார்க்கமுடியவில்லை. அவருக்கு இருக்கும் பெரிய சவால் வெளிநாடுகளில் எப்படி விளையாடப்போகிறார் என்பது தான். ஒருவேளை வெளிநாடுகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டுவிட்டால், அவருடைய காரியரில் ஒரு தலைசிறந்த வீரராக ஜெய்ஸ்வால் முடிப்பார்” என்று பாராட்டி பேசியிருந்தார்.