Steve Smith web
கிரிக்கெட்

"லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடிப்பார்!" - புதிய அத்தியாயம் தொடங்க காத்திருக்கும் ஸ்டீவ் ஸ்மித்!

ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் 400 ரன்களை சாதைனையை முறியடிப்பார் என முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன், டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வை அறிவித்துள்ளார். சொந்த மண்ணான சிட்னியில் கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடிய வார்னருக்கு மகிழ்ச்சியான விடைபெறுதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் ஆஸ்திரேலிய அணியின் அடுத்த தொடக்கவீரர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடக்க வீரராக டேவிட் வார்னர் ஒரு ஆளுமையை நிகழ்த்திய நிலையில், அவருக்கு மாற்று வீரரை கண்டுபிடிப்பதில் ஆஸ்திரேலியா நிர்வாகம் குழப்பத்தில் உள்ளது. முதல்தரபோட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பான்கிராஃப்ட், மாட் ரென்ஷா மற்றும் வில் புகோவ்ஸ்கி முதலிய வீரர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், காம்ரான் க்ரீன் அல்லது ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்கவீரராக களமிறக்கலாம் என்ற பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறது.

david warner

இதுபோன்ற ஒரு சூழலில் தான் முன்னாள் தொடக்க வீரர் ஷான் வாட்சன் ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார். அவரை தொடர்ந்து தற்போது மைக்கேல் கிளார்க்கும் ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.

லாராவின் 400 ரன்கள் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடிப்பார்!

தற்போது ஸ்டீவ் ஸ்மித் 4-ம் நிலை வீரராகவும், காம்ரான் க்ரீன் 6-ம் நிலை வீரராகவும் விளையாடிவருகின்றனர். ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய பழைய ஃபார்மை இழந்து தடுமாறிவரும் நிலையில், க்ரீனை தொடக்க வீரராக களமிறக்கும் எண்ணத்தில் ஆஸ்திரேலியா நிர்வாகம் உள்ளது.

clarke

இதற்கிடையில் ஸ்டீவ் ஸ்மித் குறித்து பேசியிருக்கும் மைக்கேல் கிளார்க், “ஸ்டீவ் ஸ்மித்தை தொடக்க வீரராக அனுப்புவது ஒரு சிறந்த நகர்த்தலாக இருக்கும். ஏனென்றால் அவர் ஒரு சிறந்த வீரர். தன்னுடைய திறமையை நிரூபிக்க போராடிவரும் அவருக்கு இதுவொரு சவாலாக இருக்கலாம். அவர் தொடக்க வீரராக ஓபன் செய்தால் 12 மாதங்களுக்குள் உலகத்தின் சிறந்த ஓப்பனராக மாறுவார்” என்று இஎஸ்பிஎன் போட்காஸ்ட் நிகழ்வில் பேசியுள்ளார்.

steve smith

மேலும், “ஒருவேளை ஸ்மித் தொடக்க வீரராக களமிறங்கும் பட்சத்தில், பிரையன் லாராவின் 400 ரன்கள் சாதனையை முறியடித்தால் ஆச்சரியப்பட வேண்டாம். அந்தளவு அவர் ஒரு தரமான நல்லவர், அப்போது அவருக்கு பேட்டிங் செய்ய முழு நாள் கிடைக்கும். அவரால் எதையும் சாதிக்க முடியும்” என்று தொடக்க வீரராக ஸ்மித்தை பேக்கப் செய்துள்ளார் மைக்கெல் கிளார்க்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் என் திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பேசிய ஸ்டீவ் ஸ்மித், "சமீபகாலமாக நான் என்னுடைய திறமைக்கு ஏற்ற கிரிக்கெட்டை டெஸ்ட்டில் விளையாடவில்லை என்று நினைக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

steve smith

இதுகுறித்து ஏபிசி ரேடியோ உடன் பேசிய அவர், "உண்மையில் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் மேலே சென்று விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆஸ்திரேலியா அணி நிர்வாகமும் அதைத்தான் செய்ய விரும்புகிறார்களா என்பதை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன். தேர்வுக்குழு, பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் மற்றும் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் நிச்சயம் அடுத்த தொடக்க வீரர் யார் என்று பேசுவார்கள். அது நானாக இருப்பேனா என தெரிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளேன்” என்று ஸ்மித் கூறியிருந்தார்.

105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித், 58 சராசரியுடன் 32 சதங்கள், 2 இரட்டை சதங்கள் உட்பட 9514 ரன்கள் குவித்துள்ளார்.