மதுஷங்கா - கோட்ஸீ X
கிரிக்கெட்

ஜெரால்ட் கோட்ஸீ, மதுஷங்காவை பக்கெட்டில் அள்ளிய MI! வேகப்பந்துவீச்சாளர்களின் கோட்டையாக மாறிய மும்பை!

2024 ஐபிஎல் ஏலத்தில் 3 வேகப்பந்துவீச்சாளர்களை ஏலத்தில் எடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய வீரர்கள் ஏலம் எப்போதும் இல்லாத வகையில் அதிக விலைக்கு சென்ற வீரர்களை கண்டுள்ளது. பல இளம் இந்திய வீரர்கள் நல்ல விலைக்கு சென்றுள்ளனர்.

எப்போதும் 5-5 என சரிக்கு சமமான ஐபிஎல் கோப்பைகளை வைத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் ஏலத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். இந்த இரண்டு அணிகளும் எந்த வீரர்களுக்கு போட்டி போடுகிறார்களோ, அந்த வீரர்களை மற்ற அணிகள் எடுக்க போட்டிப்போடும். ஏலத்திலும் அப்படி ஒரு ரைவல்ரியை வைத்துள்ளன சென்னை மற்றும் மும்பை இரண்டு அணிகளும். இந்த ஐபிஎல் ஏலத்தில் இந்த 2 அணிகளும் அவர்களுக்கு தேவையான வீரர்களுக்கு திடமாக சென்றுள்ளனர். சென்னை அணி 4 ஆல்ரவுண்டர் மற்றும் பேட்டர்களுக்கு சென்றிருக்கும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களுக்கு தேவையான 3 பந்துவீச்சாளர்களுக்கு சென்றுள்ளது.

பும்ராவுடன் இணையும் ஜெரால்ட் கோட்ஸீ, மதுஷங்கா!

கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கியிருந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற்றிய நிலையில், அவர்கள் அடுத்த பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பதில் அதிக முக்கியத்துவம் வைத்திருந்தனர். அவர்களின் பேட்டிங் வரிசை திடமாக இருக்கும் நிலையில், பந்துவீச்சை பலப்படுத்தும் நோக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்றது.

Gerald Coetzee

ஏலத்திற்கு முன்பாகவே அவர்கள் செல்லக்கூடிய பவுலர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸீ மற்றும் இலங்கையின் தில்சன் மதுஷங்கா முதலிய 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தனர். இந்தநிலையில் தான் ஏலத்திலிருந்து வெற்றிகரமாக ஜெரால்ட் கோட்ஸீயை 5 கோடிக்கும், மதுசங்காவை 4.60 கோடிக்கும் விலைக்கு வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

Dilshan Madushanka

இந்த 2 ஸ்மார்ட் பிக்கிற்கு பிறகு மும்பை இந்தியன்ஸின் பவுலிங் பலமானது வலுவாகியுள்ளது. ஏற்கனவே அணியில் ”ஜஸ்பிரித் பும்ரா, ஜேசன் பெஹண்ட்ராஃப், ஆகாஷ் மத்வால், ஹர்திக் பாண்டியா மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் முதலிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்த நிலையில், தற்போது கோட்ஸீ மற்றும் மதுசங்கா முதலிய வீரர்கள் இணைந்துள்ளனர். இந்த 2 வீரர்களும் நடந்து முடிந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அதிகப்படியான விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள். இவர்களுடன் மற்றொரு இலங்கை வேகப்பந்துவீச்சாளரான நுவான் துஷாரா மற்றும், ஸ்பின்னர் ஷ்ரேயாஸ் கோபாலையும் விலைக்கு வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணி: ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், கேமரூன் கிரீன், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

வர்த்தகம்: ரொமாரியோ ஷெப்பர்ட் (LSG-லிருந்து), ஹர்திக் பாண்டியா (GT-ல் இருந்து)

2024 மினி ஏலம்: ஜெரால்ட் கோட்ஸீ (5 கோடி), தில்சன் மதுசங்கா (4.60 கோடி), நுவான் துஷாரா (4.8 கோடி), ஸ்ரேயாஸ் கோபால் (20 லட்சம்), நமன் திர் (20 லட்சம்), அன்ஷுல் கம்போஜ்(20 லட்சம்)