MCC apologises Twitter
கிரிக்கெட்

ஆஸி. வீரர்களுடன் வாக்குவாதம்; லாங் ரூமில் உருவான மோதல் சூழல்.. மன்னிப்பு கோரியது எம்.சி.சி. #Ashes23

லார்ட்ஸ் மைதானத்தின் லாங் ரூமில் நடந்த சம்பவத்திற்கு எம்.சி.சி. வருத்தம் தெரிவித்துள்ளது.

Justindurai S

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு சர்ச்சையான சம்பவம் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்துக்கு 371 வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. 114 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 50 ரன்கள் என்ற ஸ்கோருடன் பென் டக்கட் விளையாடி ஆட்டத்தில் மேலும் 33 ரன்கள் சேர்த்து 83 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஸ்டோக்ஸ் - ஜானி பாரிஸ்டோ இணைந்து பொறுப்பான ஆட்டத்தை விளையாடி வந்தனர். அப்போது ஆட்டத்தின் 51-வது ஓவரின் கடைசி பந்து ஜானி பரிஸ்டோவுக்கு ஷார்ட் பால் வீசப்பட்டது. அதனை பாரிஸ்டோ குனிந்து விட்டதால் பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது.

பாரிஸ்டோ அந்த பந்து முடிந்து விட்டது என நினைத்து எப்போதும் போல் கிரிசை விட்டு வெளியே வந்தார். ஆனால் பாரிஸ்டோ வெளியே வந்ததும் அலெக்ஸ் கேரி ஸ்டம்பில் பந்தை அடித்து ரன் அவுட் செய்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் இதற்கு அவுட் கேட்டார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த பாரிஸ்டோ அப்படியே நின்றார். இதனையடுத்து மூன்றாம் நடுவரின் முடிவுக்கு இது கொண்டு செல்லப்பட்டது. அவர் பாரிஸ்டோ விட்டு வெளியே சென்றதால் இது அவுட் என அறிவித்தார். இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் 193 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை இழந்தது.

பொதுவாக எந்த அணி வீரர்களும் குறுக்கு வழியில் ரன் அவுட் செய்வதை விரும்ப மாட்டார்கள். ஆனால் ஆஸ்திரேலிய அணி பக்குவமில்லாத முறையில் இந்த ரன் அவுட்டை நிகழ்த்தியதாக விமர்சனங்கள் எழுந்தது.. இது கிரிக்கெட் விதிப்படி சரியா தவறா என்ற விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள், ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Ashes 2023

ஐசிசி விதிமுறை 20.1.2-இன் படி, பந்து பவுலர் முனை நடுவரை சென்றடையும் வரை அது உயிர்ப்புடன் இருக்கிறது, டெட் இல்லை என்கிறது. ஆகவே அது அவுட் தான். இதில் 'ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்' என்ற வாதத்திற்கு எல்லாம் இடமில்லை. ஆனால் பேர்ஸ்டோ வெளியே செல்வதற்காக கேரி காத்திருந்து இதைச் செய்தாரா என்பதற்கும் ஆதாரம் இல்லை. அனைத்துமே உடனடியாக நிகழ்ந்தது. கேரி ஸ்மார்ட்டாகச் செயல்பட்டதாகவே இங்கிலாந்து வர்ணனையாளர்களே கூறுகின்றனர்.

மேலும் ஐந்தாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் ‘டிரெசிங் ரூம்’ சென்றனர். அப்போது லார்ட்ஸ் மைதானத்தின் லாங் ரூமில் இருந்த மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.,) உறுப்பினர்கள் ஆஸ்திரேலிய வீரர்களிடம் தங்களது கோபத்தை வெளிப்படுத்த, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உண்டாகும் சூழல் உருவானது. உடனடியாக மைதான பாதுகாவலர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்து விட்டனர். இச்சம்பவம் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா சார்பில் எம்.சி.சி.,யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

MCC apologises

இந்நிலையில் லாங் ரூமில் நடந்த சம்பவத்திற்கு எம்.சி.சி. வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எம்.சி.சி. செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் ஆஸ்திரேலிய அணியிடம் நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுள்ளோம். மேலும் எங்கள் ஒழுங்குமுறை செயல்முறைகள் மூலம் நாங்கள் எதிர்பார்க்கும் தரத்தை பராமரிக்காத எந்தவொரு உறுப்பினரையும் நிச்சயம் கண்டிப்போம். யாரையும் மைதானத்தில் இருந்து வெளியேற்ற வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.