virat kohli - smith web
கிரிக்கெட்

”கோலி-ஸ்மித் இருவரில் ஒருவர் அதிக ரன்களுக்கு செல்வர்..” - பார்டர் கவாஸ்கர் டிரோபி பற்றி மேக்ஸ்வெல்!

தற்கால தலைமுறையின் இரண்டு சிறந்த பேட்டர்கள் மோதிக்கொள்வதை பார்ப்பதற்கு சிறப்பானதாக இருக்கும் என க்ளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

Rishan Vengai

நம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடவிருக்கிறது. ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற கடந்த இரண்டு பார்டர்-கவாஸ்கர் தொடரையும் இந்தியா கைப்பற்றியிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா அணியும் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் இருந்துவருகிறது.

போட்டித்தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதே ஒவ்வொரு ஆஸ்திரேலியா வீரர்களும் இந்தியாவை இந்தமுறை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என கருத்து தெரிவித்துவருகின்றனர். அனைத்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களும் 3-2 என ஆஸ்திரேலியா வெல்லும் என கணித்துவரும் நிலையில், இந்தியாவின் முன்னாள் வீரர் கவாஸ்கர் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்யும் எனக்கூறியுள்ளார்.

ind vs aus

இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் டிரோபி குறித்து பேசியிருக்கும் க்ளென் மேக்ஸ்வெல், தற்கால தலைமுறையின் சிறந்த பேட்டர்களான விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் மோதிக்கொள்வதை பார்க்க சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இருவரில் ஒருவர் அதிக ரன்கள் அடிப்பார்..

விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரையும் ஒன்றாக பார்க்க ஆவலாக இருப்பதாக தெரிவித்திருக்கும் மேக்ஸ்வெல், “ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலி இருவரும் சூப்பர் ஸ்டார் பேட்டர்கள், அவர்கள் நேருக்கு நேர் செல்வதைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கும். அவர்களில் ஒருவர் தொடரில் பெரிதாகப் போகப் போகிறார். எங்கள் தலைமுறையின் சிறந்த இரண்டு கிரிக்கெட் வீரர்களின் செயலை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று கிளென் மேக்ஸ்வெல் ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.

மேக்ஸ்வெல்

இதற்குமுன்பு விராட் கோலி குறித்து பேசியிருந்த ஸ்டீவ் ஸ்மித், அவரை ஒரு ஆஸ்திரேலிய வீரர் என்று குறிப்பிட்டார். ஸ்மித் பேசுகையில், “விராட் கோலி ஒரு ஆஸ்திரேலியர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் சவால்களை ஏற்றுக்கொண்டு போட்டியாளர்களுக்கு மேலாக வர முயற்சிக்கும் அவருடைய அணுகுமுறை அப்படியானதாக இருக்கும். நாங்கள் ஒரு நெருக்கமான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறோம், அவ்வப்போது செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறோம். அவர் ஒரு அற்புதமான வீரர், எனவே அவருக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சிறப்பானதாக இருக்கும்” என்று ஸ்மித் கூறியிருந்தார்.

steve smith

இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ம் தேதி நடைபெறவிருக்கிறது.