ஸ்மித், மேக்ஸ்வெல் pt web
கிரிக்கெட்

பார்டர் கவாஸ்கர் : இந்தியாவுக்கு இருக்கும் ஒரே தலைவலி; அடித்துக் கூறும் மேக்ஸ்வெல்..!

பார்டர் கவாஸ்கர் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் சிறப்பான முறையில் தயாராகி உள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

Angeshwar G

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வரும் 22 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடர் மட்டுமில்லாமல், இந்தியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடரையும் வென்றுள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக 4 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக 2014-ம் ஆண்டுதான் தொடரை வென்றிருந்தது.

2018, 2021 என இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியிருக்கும் இந்தியா மூன்றாவது முறையும் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் களம் இறங்க ஆஸ்திரேலியா எப்பாடுபட்டாவது தொடரை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது.

அது மட்டுமின்றி கடந்த 1991-1992 ஆம் ஆண்டு நடந்த தொடருக்குப் பின், முதன் முறையாக இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 1991 - 1992 ஆம் ஆண்டு நடந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது என்பது குறுப்பிடத்தக்கது

இந்நிலையில்தான், இந்திய அணிக்கு தலைவலியை ஏற்படுத்தும் ஆஸ்திரேலிய பேட்டராக ஸ்டீவ் ஸ்மித் இருப்பார் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கில் தற்போது அட்டகாசமாக இருக்கிறார். அவருடைய footwork, timing, movement என அனைத்தும் சிறப்பாக ஒத்திசைந்து அமைந்துள்ளது. அவருக்கு வீசப்பட்ட எந்த ஒரு பந்திற்கும் அவர் பதற்றமடையவில்லை.

அவர் பலமணிநேரம் பயிற்சியில் ஈடுபடுவது ஒன்றே அவர் ஏன் உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்கிறார் என்பதைக் கூறுகிறது. அவர் பயிற்சியில் ஒருபோதும் திருப்தி அடையவில்லை. அவரது ஷாட்கள், அவர் தனது ஆட்டத்திறனில் எவ்வளவு கவனம் செலுத்தி மேம்படுத்தியுள்ளார் என்பதற்கான அறிகுறி" என தெரிவித்துள்ளார்.

steve smith

35 வயதான ஸ்மித் 109 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 9685 ரன்களை எடுத்துள்ளார். இதில் 32 சதங்களும், 41 அரைசதங்களும் அடக்கம். அவரது சராசரி 56 ஆக உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவிற்கு எதிராக 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2042 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 65.87 என்ற சிறப்பான ஒன்றாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.