england cricket team ICC
கிரிக்கெட்

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதில் இந்திய மக்கள் பேராற்றலுடன் இருக்கிறார்கள்! - மேத்யூ ஹைடன்

இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டுமென்றால், போட்டியின் ஒவ்வொரு பந்திலும் நீங்கள் குருவாக இருக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் வென்றதற்கு பிறகு, இங்கிலாந்தின் பாஸ்பால் ஆட்டத்தை புகழ்ந்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதற்கு இதுவே சிறந்த தருணம் என்று கூறினார்கள். ஆனால் முதல் போட்டியின் தோல்வியிலிருந்து வேகமாக எழுந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு மிகப்பெரிய தோல்வியை பரிசளித்துள்ளது.

ஒரு வரலாற்று தோல்விக்கு பிறகு 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கும் இந்திய அணி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு இங்கிலாந்தின் மோசமான ஆட்டத்தை விமர்சித்திருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர்கள், ராஞ்சியில் நடைபெறவிருக்கும் 4வது போட்டியில் வெல்லாவிட்டால் ”பாஸ்பால் ஆட்டம்” என்பதே பொய்யாகிவிடும் எனுமளவு விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி குறித்து பேசியிருக்கும் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன், இந்தியாவை வீழ்த்த நீங்கள் ஒவ்வொரு பந்திலும் ஒருபடி முன்னே இருக்கவேண்டும் என்று இங்கிலாந்து வீரர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

அனைத்து விதத்திலும் நீங்கள் குருவாக இருக்க வேண்டும்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பேசியிருக்கும் மேத்யூ ஹைடன், “இந்த டெஸ்ட் தொடரில் எல்லா வழிகளிலும் இந்திய அணி தான் முன்னிலையில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியாவிற்கு தங்களுடைய சொந்த மண்ணில் அவர்களின் ஆற்றல் மற்றும் வளத்தை பாதுகாக்கும் ஒரு போராக இது அமைந்திருக்கிறது. இந்திய அணி மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களும், நாடும் உங்களை வீழ்த்துவதில் கவனம் செலுத்துகிறது. வேறு அணிகளை தவிர இந்தியாவில், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக வெற்றி பெறுவதில் இந்த பெரிய ஆற்றல் இங்கு தானாகவே உள்ளது” என்று ஹைடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியுள்ளார்.

england cricket team

மேலும் பேசிய அவர், “இவை எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்த வேண்டுமானாலும், பேட்டிங் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் அனைத்திலும் குருவாக இருக்க வேண்டும். இந்தத் தொடரின் முந்தைய ஆட்டங்களில் இங்கிலாந்து அணி முன்னிலை பெறுவதை நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால் அதை அவர்களால் தக்கவைக்க முடியவில்லை. அதற்குக் காரணம் ஒவ்வொரு மொமண்ட்டிலும், ஒவ்வொரு பந்திலும், ஒவ்வொரு செஸ்ஸினிலும் நீங்கள் ஆட்டத்தில் இருக்க வேண்டும். இல்லையேல் உங்களால் இந்திய மண்ணில் தாக்குபிடிக்க முடியாது” என்று பேசியுள்ளார்.