Ben Stokes | Dawid Malan | Sam Curran Shailendra Bhojak
கிரிக்கெட்

ENGvSL | சரிவிலிருந்து மீளுமா நடப்பு சாம்பியன்..!

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஜேசன் ராய் போன்ற வீரர்களின் காயம் போக, இப்போது அந்த அணியின் டாப் விக்கெட் டேக்கர் ரீஸ் டாப்லியும் காயமடைந்து தொடரிலிருது வெளியேறியிருக்கிறார்.

Viyan
போட்டி 25: இங்கிலாந்து vs இலங்கை
மைதானம்: எம் சிதம்பரம் ஸ்டேடியம், பெங்களூரு
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 26, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

இங்கிலாந்து
போட்டிகள்: 4, வெற்றி - 1, தோல்விகள் - 3, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2
சிறந்த பேட்ஸ்மேன்: டேவிட் மலான் - 192 ரன்கள்
சிறந்த பௌலர்: ரீஸ் டாப்லி - 8 விக்கெட்டுகள்
நியூசிலாந்து அணியுடன் முதல் போட்டியில் தோற்றிருந்தாலும், இங்கிலாந்து அடுத்த போட்டிகளில் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போல் வங்கதேசத்துக்கு எதிராக வென்றிருந்தாலும், அடுத்த போட்டியிலேயே ஆப்கானிஸ்தானிடம் தோற்று பேரதிர்ச்சி கொடுத்தது நடப்பு சாம்பியன். முந்தைய போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இங்கிலாந்து.

England’s Sam Curran and former Sri Lankan cricketer Mahela Jayawardene

இலங்கை
போட்டிகள்: 4, வெற்றி - 1, தோல்விகள் - 3, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2
சிறந்த பேட்ஸ்மேன்: சதீரா சமரவிக்ரமா - 230 ரன்கள்
சிறந்த பௌலர்: தில்ஷன் மதுஷன்கா - 11 விக்கெட்டுகள்
தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் அடி வாங்கி ஹாட்ரிக் தோல்வியோடு தொடரைத் தொடங்கிய இலங்கை, கடைசிப் போட்டியில் போராடி நெதர்லாந்தை வீழ்த்திவிட்டது. ரன்ரேட் இங்கிலாந்தை விட கொஞ்சம் சுமாராக இருப்பதால், புள்ளிப் பட்டியலில் நடப்பு சாம்பியனுக்கு மேலே இருக்கிறது இலங்கை.

மைதானம் எப்படி?

சின்னசாமி ஸ்டேடியம் மிகவும் சின்ன ஸ்டேடியம். சிக்ஸர்கள் பறக்க ரன் மழையாகப் பொழியும். இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான் போட்டி இங்கு தான் நடந்தது. அந்தப் போட்டியில் 672 ரன்கள் குவிக்கப்பட்டது. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் இருவரும் சதம் அடித்து மிரட்டினார்கள். ஒருகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 400 ரன்களை குவித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு மிரட்டலாக ஆடியது அந்த அணி. முதல் இன்னிங்ஸ் மட்டுமல்ல, இரண்டாவது இன்னிங்ஸிலுமே ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாகத்தான் இருந்தது. பாகிஸ்தான் அணியும் நன்றாகவே ஆடி 45 ஓவர்களிலேயே 300 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியிலும் அப்படி மிகப் பெரிய ஸ்கோர்களை எதிர்பார்க்கலாம்.

உளவியல் ரீதியாக எல்லாமே மாறவேண்டும்

Ben Stokes

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி இப்படியொரு பெர்ஃபாமன்ஸ் கொடுக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. பேட்டிங், பௌலிங் அனைத்துமே அந்த அணிக்கு காலை வாரிவிட்டது. ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், ஜேசன் ராய் போன்ற வீரர்களின் காயம் போக, இப்போது அந்த அணியின் டாப் விக்கெட் டேக்கர் ரீஸ் டாப்லியும் காயமடைந்து தொடரிலிருது வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதில் பிரைடன் கார்ஸ் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் அவர்களின் பந்துவீச்சு இன்னும் பலவீனமாகியிருக்கிறது. வங்கதேசம் தவிர அனைத்து அணிகளுமே இங்கிலாந்துக்கு எதிராக எளிதாக ரன் சேர்த்திருக்கின்றன. கிரிக்கெட் உலகில் இங்கிலாந்தின் செயல்பாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்த அணியும் உலகக் கோப்பையின் முடிவை ஏற்றுக்கொண்டது போலத்தான் தெரிகிறது. பயிற்சியாளர், ஜோ ரூட் போன்றவர்களெல்லாம் 'குறைவான ஒருநாள் போட்டிகளில் விளையாடியது எப்படி அணிக்கு பாதகமாக அமைந்தது' என இப்போதே பேசத் தொடங்கிவிட்டார்கள். இவையெல்லாம் மாறவேண்டுமெனில் அந்த அணியின் சீனியர் வீரர்கள் ஒரு மிரட்டல் பெர்ஃபாமன்ஸ் கொடுக்கவேண்டும்.

வெற்றிப் பயணத்தைத் தொடருமா இலங்கை

நெதர்லாந்துக்கு எதிரான வெற்றி இலங்கை அணிக்குப் பெரிய நம்பிக்கை கொடுக்கும். பதும் நிசன்கா, சதீரா சமரவிக்ரமா, சரித் அசலன்கா ஆகியோர் நல்லதொரு இன்னிங்ஸை ஆடினார்கள். ஏற்கெனவே ஒரு சதம் அடித்திருந்த சமரவிக்ரமா அந்தப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் விளாசி அந்த அணியின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்தார். அதேசமயம் முதலிரு போட்டிகளிலும் பட்டையைக் கிளப்பிய குசல் மெண்டிஸ் அடுத்த இரு போட்டிகளில் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. இந்தப் போட்டியில் அவர் தன் சிறந்த இன்னிங்ஸை ஆடினால், இலங்கையின் மிடில் ஆர்டர் இங்கிலாந்துக்கு நிச்சயம் சவால் கொடுக்கும். பந்துவீச்சைப் பொறுத்தவரை மதுஷன்கா அந்த அணிக்கு சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார். 11 விக்கெட்டுகளோடு இந்த உலகக் கோப்பையின் மூன்றாவது டாப் விக்கெட் டேக்கராக இருக்கிறார் அவர். ஆனால் அவரைத் தவிர வேறு யாருமே சீராக விக்கெட் வீழ்த்துவதில்லை. அதுமட்டுமல்லாமல் ரன்களையும் வாரி வழங்கிவிடுகிறார்கள். மற்ற பௌலர்கள் எழுச்சி கண்டால் தான் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தடுத்து நிறுத்த முடியும்.

கவனிக்கவேண்டிய வீரர்கள்

இங்கிலாந்து - ஜானி பேர்ஸ்டோ: அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கும் பேர்ஸ்டோ விரைவில் அவுட் ஆகிவிடுகிறார். சற்று பலவீனமான இலங்கை பௌலிங்குக்கு எதிராக அவர் ருத்ரதாண்டவம் ஆடக்கூடும்.

இலங்கை - தில்ஷன் மதுஷன்கா: பெரும் வெற்றிக்குக் காத்திருக்கும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த இலங்கைக்கு இருக்கும் ஒரே ஆயுதம் இவர்தான்!