மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  முகநூல்
கிரிக்கெட்

IPL 2024 | விடைபெற்ற ரோகித் சர்மா..? எழுந்து நின்று மரியாதை செய்த MI Fans! மும்பையை வீழ்த்திய LSG!

மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அணி.

Rishan Vengai

இந்திய கேப்டனாக ரோகித் சர்மா தன்னுடைய நாட்டிற்கும் இந்திய அணிக்கும் ஒரு உலகக்கோப்பையாவது வென்று கொடுக்கவேண்டும் என்ற கனவோடு பயணித்துவருகிறார். 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் கோப்பையின் மீது பாதி கைகளை வைத்த ரோகித் தலைமையிலான இந்திய அணி, இறுதிப்போட்டியில் துரதிர்ஷ்டவசமாக ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை பறிகொடுத்தது.

2023 ஒருநாள் உலகக்கோப்பை முழுவதும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தாலும், தொடர் முழுவதும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தாலும், கோப்பை வெல்லாத ஒரே காரணத்திற்காக ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டார். புதிய கேப்டனாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றிக்கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய மும்பை நிர்வாகம், அவர் கேப்டன் பொறுப்பால் பேட்டிங்கில் கோட்டைவிடுகிறார். இனி ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பான ஆட்டத்தை ரோகித்தால் வெளிப்படுத்த முடியும் என்று கூறியது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் 2023 ஒருநாள் உலக்கோப்பையில் விராட் கோலிக்கு பிறகு அதிக ரன்களை குவித்த ஒரேவீரர் ரோகித் சர்மா மட்டும்தான். தொடர் முழுவதும் அதிரடியில் மிரட்டிய அவர், 54 சராசரியில் 597 ரன்களை குவித்திருந்தார்.

“வயாசாகிடுச்சு, மோசமாக விளையாடுகிறார்” என்ற சப்பைக்கட்டு காரணங்களை கண்டு அதிருப்தியடைந்த ரோகித் சர்மா ரசிகர்கள், ”5 கோப்பைகளை வென்ற கேப்டனை இப்படியெல்லாம் அவமானம் செய்யக்கூடாது” என மும்பை அணியை UNFollow செய்தும், ஹர்திக் பாண்டியா மீது வெறுப்பையும் வெளிப்படுத்திவருகின்றனர். ராஜாவாக இருந்த ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு ஹர்திக் பாண்டியா அலைக்கழித்த போதும், அமைதியாக இருந்த ரோகித் சர்மா தொடர் முழுவதும் ஒரு வீரராக தன்னுடைய பங்கை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் வேறு அணிக்கு ரோகித் சர்மா சென்றுவிடுவார் என்று கூறப்படும் நிலையில், மும்பை அணிக்காக தனது கடைசி ஐபிஎல் போட்டியில் பங்கேற்றார் ரோகித் சர்மா.

அதிரடியில் மிரட்டிய நிக்கோலஸ் பூரன்!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்ந்தெடுக்க, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக பந்துவீசிய நுவான் துஷாரா தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல்லை 0 ரன்னில் வெளியேற்றி, முதல் ஓவரிலேயே விக்கெட்டை எடுத்துவந்தார். தொடர்ந்து சிறப்பாக பந்துவீசிய மும்பை பவுலர்கள், பவர்பிளேவில் ரன்களை விட்டுக்கொடுக்காமல் டைட்டாக பந்துவீசினர்.

மேலும் விக்கெட்டை இழக்கக்கூடாது என கேஎல் ராகுல் பொறுமையாக விளையாட, அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விரட்டிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் ரன்களை எடுத்துவந்தார். ஆனால் பவர்பிளேவுக்கு பிறகு பந்துவீச வந்த சாவ்லா ஸ்டொய்னிஸை 28 ரன்னிலும், தீபக் ஹூடாவை 11 ரன்னிலும் வெளியேற்றி விக்கெட்டை எடுத்துவந்தார். 3 விக்கெட்டுடன் 10 ஓவர்களுக்கு 69 ரன்களே எடுத்திருந்த நிலையில், 5வது வீரராக களத்திற்கு வந்த நிக்கோலஸ் பூரன் “இந்த பிட்ச்ல யா மொக்கபோட்டுட்டு இருக்கிங்க” என நாலாபுறமும் சிக்சர்களாக பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார்.

8 சிக்சர்களை விளாசி சிக்சர்மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன் 29 பந்தில் 75 ரன்கள் அடித்து மிரட்டிவிட, பொறுத்தது போதுமென 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த கேஎல் ராகுல் 55 ரன்கள் அடிக்க 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

தனியாளாக போராடிய ரோகித் சர்மா!

215 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 10 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு லக்னோ அணிக்கு பதிலடி கொடுத்த ரோகித் சர்மா, 38 பந்துகளில் 68 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார். ஆனால் அவரை தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. டெவால்ட் பிரேவிஸ் 2 சிக்சர்கள் அடித்தாலும், பின்னர் மந்தமாக விளையாடி வெளியேறினார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 0 ரன்னிலும், இஷான் கிஷன் 14, ஹர்திக் பாண்டியா 16, நேஹல் வதேரா 1 ரன் என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேற மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது.

அவ்வளவுதான் இதற்குபிறகு மும்பை அணி கம்பேக் கொடுக்காது என நினைத்த போது, 7வது வீரராக களத்திற்கு வந்த நமன் திர் 4 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என துவம்சம் செய்து மரண அடி கொடுத்தார். கடைசியில் வந்து 28 பந்துகளுக்கு 62 ரன்களடித்து நமன் திர் போராடினாலும், மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றி இலக்கை எட்டமுடியவில்லை. முடிவில் 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. ஆட்டநாயகனாக நிக்கோலஸ் பூரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதான் கடைசிபோட்டியா?

மும்பை அணியில் ரோகித் சர்மாவிற்கு கடைசி போட்டி என கூறப்பட்டதால், MI ஜெர்சியில் ரோகித் சர்மாவை பார்க்கவேண்டுமென மைதானத்திற்கு படையெடுத்த மும்பை ரசிகர்கள் “ரோகித் சர்மா அவுட்டாகி வெளியேறும் போது, எழுந்து நின்று கைத்தட்டி மரியாதை செலுத்தி விடைகொடுத்தனர்”. தங்களுடைய வெற்றிக்கேப்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதை நினைத்து ஒவ்வொரு மும்பை ரசிகர்களும் வேதனையுடன் பதிவிட்டுவருகின்றனர். எப்படியிருப்பினும் வேறு அணிக்கு கேப்டனாக செல்லுங்கள் ரோகித்சர்மா என பல ரசிகர்கள் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப்போட்டியின் முடிவுக்கு பிறகு டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இரண்டு அணிகளும் அதிகாரப்பூர்வமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. மீதமிருக்கும் 4வது இடத்திற்காக நாளை சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.