csk vs lsg pt web
கிரிக்கெட்

தோற்றாலும் ஒரே ஆறுதல் தோனி மட்டும் தான்.. சென்னையிடம் இருந்து வெற்றியைப் பறித்த ராகுல்

IPL என்றாலே உற்சாகம் தான். அதிலும் தோனி அடிக்கும் சிக்ஸர்கள் கொண்டாட்டத்தின் மறு உருவம். தனது 42 ஆவது வயதிலும் தோனி அடிக்கும் சிக்ஸர்கள் பிரம்மாண்டத்தின் சாட்சிகள்.. தோனிக்கு மட்டும் வயச freeze பண்ணீட்டான் ஆண்டவன்.. சரி நாம் ஆட்டத்துக்குள்ள போவோம்.

Angeshwar G

சென்னை VS லக்னோ

ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி லக்னோவில் வாஜ்பாயி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. 'யாதும் ஊரே.. யாவரும் சிஎஸ்கேயன்ஸ்' என்பது போல் மஞ்சளாக இருந்தது மைதானம். கெத்து காட்டினார்கள் சென்னை ரசிகர்கள்.. ஆனால், போட்டி முடிவில் நடந்தது என்னவோ வேறு..

திணறும் ரவீந்திரா

டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். ரஹானே நிதானமாக தொடங்கினாலும், தான் சந்தித்த முதல்பந்திலேயே தனது விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார் ரச்சின் ரவீந்திரா. முதல் இரு போட்டிகளில் மட்டும் 35 பந்துகளில் 83 ரன்களை குவித்த அவர், அடுத்த 5 போட்டிகளில் வெறும் 50 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். எப்போதும் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களே பெரும்பாலும் வெற்றியை நிர்ணயிப்பார்கள்.. 17 சீசன்களிலும் தொடரும் பாரம்பரியம் அது. மைக்கேல் ஹஸி, வாட்சன், ஸ்மித், டுப்ளசிஸ் என பட்டியல் நீளும். நடப்பு தொடரிலும் அது தொடர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..

அணியை கரைசேர்த்த ஜடேஜா மொயின்

நிதானமாக ஆடிய ருத்துராஜும் 17 ரன்களுக்கு வெளியேற மொத்தமாகவே திணறியது சென்னை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துபே, ரிஸ்வி சொற்ப ரன்களில் வெளியேற சென்னை அணி 150 ரன்களைத் தொடுமா என்ற சந்தேகம் எழுந்தது. சென்னை அணி தள்ளாட்டத்தில் இருந்தபோது, அதிரடி காட்ட நினைத்து அவுட் ஆனார் ரிஸ்வி.. முதிர்ச்சியின்மை அப்பட்டமாக தெரிந்தது.

எது எப்படி ஆனாலும் ஜடேஜாவும், மொயின் அலியும் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து அணியை கரைசேர்த்தனர். 18 ஆவது ஓவரில் மொயின் அலி அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இறுதிவரை களத்தில் இருந்த ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்களை எடுத்து தூணாக இருந்தார்.

vintage dhoni

பின்னர் வந்தார் தோனி. MS Dhoni, right handed batsman, comes to the crease. அதிர்ந்தது அரங்கம். 124 டெசிபெல். அத்தனைக்கும் நியாயம் சேர்த்தார் ‘தல’.

தோனி அடித்த அடுத்த சிக்ஸர்கள் எப்போதும் கொண்டாட்டத்திற்கு உரியது. 18.2 ஆவது பந்தை மோஷின் பவுன்சராக வீச, ஆஃப் சைடில் சற்றே நகர்ந்து, கீப்பர் தலைக்கு மேல் தூக்கி அடித்தார் vintage dhoni.. தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் தோனி இதுபோல் ஆடி இருப்பார். அதன்பின் இதுபோன்று அவர் ஆடி யாரும் பார்த்திருக்க முடியாது. இதுமாதிரியான ஷாட்கள் பந்துவீச்சாளரை மேலும் பதற்றத்திற்கு உள்ளாக்கும். 18 ஆவது ஓவரில் மட்டும் மோஷின் 3 வைட்களை வீசினார். அனைத்தும் தோனிக்கு எதிரானவை. பாவம் அவரால் தான் என்ன செய்ய முடியும். எதிரில் இருப்பவர் தோனி ஆயிற்றே. காட்டாறாக ஆடிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு எதிராக என்ன மாதிரியான பந்தை வீசுவது.

மொத்தமாகவே 9 பந்துகளை எதிர்கொண்ட தோனி 28 ரன்களை குவித்தார். 3 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள். அவரது ஸ்ட்ரைக் ரேட் 311.11. சென்னை சிறப்பாக முடிக்க 177 ரன்களை லக்னோ அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. போதுமான டோட்டல் தான். ஆனால் அத்தனையும் கனவாக மாற்றினர் லக்னோ பேட்ஸ்மேன்கள்.

வெற்றியை எளிதாக்கிய லக்னோ Openers

முதலில் நிதானமாக தொடங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல், டி காக் போகப்போக ஆக்ஸிலேட்டரை கூட்டினர். சென்னை அணி தனது முதல் விக்கெட்டை எடுக்க 15 ஆவது ஓவர் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. அதற்குள் ஆட்டம் கைமீறிப் போனது. 134 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தது டிகாக், ராகுல் ஜோடி. 31 ரன்களில் டிகாக் கொடுத்த கடுமையான கேட்சை தவறவிட்டார் பதிரானா. போட்டியில் போக்கில் அந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தாலும், தாக்கம் பெரிதளவில் இருந்திருக்காது.. ஆனாலும், விக்கெட் என்பது எப்போதும் முக்கியமானது அல்லவா..

மறுபுறம் சீரான இடைவேளைகளில் பவுண்டரிகளை விளாசிய ‘க்ளாசி’ ராகுலைத் தடுக்க சென்னை அணியின் எந்த பந்துவீச்சாளராலும் முடியவில்லை. 53 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் 82 ரன்களைக் குவித்து அசைக்க முடியாத வெற்றிக்கு வித்திட்டார். பின் வந்த பூரனும் தன் பங்கிற்கு அதிரடி காட்ட லக்னோ அணி 19 ஆவது ஓவரின் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

மொயின் அலி ஒரு ஓவர் வீசி இருந்தாலும் சிறப்பாக வீசினார். ஜடேஜாவிற்கு மூன்றாவது முறையாக மீண்டும் கொடுக்கப்பட்ட வாய்ப்பு, மொயின் அலிக்கு கொடுக்கப்படவில்லை. சென்னை அணியின் பந்துவீச்சில் பதிரானா மட்டுமே ஆறுதல் அளித்தார்.

இதனையும் மறுக்காமல் சொல்லியாக வேண்டும். லக்னோ அணிக்கு ராகுல் டிகாக் பார்ட்னர்ஷிப் ஆணிவேராக இருப்பது போட்டிக்கு போட்டி உறுதியாகி வருகிறது.

சென்னை அணியை பொறுத்தமட்டில், பழையபடி ஓப்பனிங் சிறப்பாக மாறுவதும், பவர் ப்ளேவில் எதிரணியின் சில விக்கெட்களையாவது வீழ்த்துவதும் மட்டுமே வெற்றிக்கு உறுதுணையாக அமையும்.

சென்னை அணி தனது அடுத்த போட்டியில் மீண்டும் லக்னோ அணியை எதிர்கொள்கிறது. இங்கு இழந்த வெற்றியை 23 ஆம் தேதி ஈடுசெய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்,. ஏனெனில் போட்டி நடைபெறுவது சென்னையில். கோட்டையில் சிங்கத்தின் கர்ஜனைக்காக காத்திருப்போம்..