the hundred womens final web
கிரிக்கெட்

The Hundred பெண்கள்: 3 பந்துக்கு 4 ரன்கள் தேவை.. சிக்சருக்கு அனுப்பி கோப்பை வென்ற தீப்தி ஷர்மா!

Rishan Vengai

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரடு (100 பந்துகள்) கிரிக்கெட் தொடரானது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு தரப்பினருக்குமான தொடராக 2021-ல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 4வது சீசன் நடத்தப்பட்டது. இந்த தொடரில் ஒரு அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மொத்தம் 100 பந்துகள் மட்டுமே கொடுக்கப்படும்.

ஜுலை 23-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த ஆண்டுக்கான தி ஹண்ட்ரடு பெண்கள் லீக் போட்டியானது ஆகஸ்டு 18ம் தேதியான நேற்று இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது.

the hundred

பரபரப்பாக நடைபெற்ற தி ஹண்ட்ரடு 2024 லீக் போட்டியில்,

  1. ஓவல் இன்விசிபிள்ஸ்,

  2. பர்மிங்காம் பீனிக்ஸ் ,

  3. சதர்ன் பிரேவ்,

  4. நார்தென் சூப்பர்சார்ஜர்ஸ்,

  5. டிரெண்ட் ராக்கெட்ஸ்,

  6. வெல்ஸ் ஃபையர்,

  7. மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ்,

  8. லண்டன் ஸ்பிரிட்

முதலிய 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. இதில் சிறப்பாக செயல்பட்ட லண்டன் ஸ்பிரிட் மற்றும் வெல்ஸ் ஃபையர் அணிகள் இறுதிப்போட்டியை எட்டின.

அழுத்தமான நேரத்தில் சிக்சர் பறக்கவிட்ட தீப்தி சர்மா!

தி ஹண்ட்ரடு 2024 லீக் தொடரின் பெண்களுக்கான இறுதிப்போட்டியானது ஆகஸ்டு 18ம் தேதியான நேற்று லண்டன் ஸ்பிரிட் மற்றும் வெல்ஸ் ஃபையர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய வெல்ஸ் ஃபையர் அணி 100 பந்துகள் முடிவில் 115 ரன்களை அடித்தது. அதிகப்படியாக ஜானசென் 54 ரன்களை விளாசினார்.

Jonassen

116 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய லண்டன் ஸ்பிரிட் அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வெல்ஸ் ஃபயர் அணி பவுலர்கள் விரைவாகவே இரண்டு விக்கெட்டுகளை எடுத்துவந்து ஃபைட் கொடுத்தனர். 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஸ்பிரிட் அணிக்கு நிலைத்து நின்று ஆடிய ஜியார்ஜியா 34 ரன்கள் அடித்து நம்பிக்கை கொடுத்தார்.

இதையும் படிக்க: 3 ஐசிசி கோப்பை.. 50 ODI சதம்.. தலைசிறந்த TEST கேப்டன்! 16 ஆண்டுகள் நிறைவு செய்த கோலியின் சாதனைகள்!

ஆனால் மறுமுனையில் இருந்த கேப்டன் நைட் மற்றும் ஜிப்சன் இருவரையும் போல்டாக்கி அனுப்பிவைத்த ஷம்னிம் இஸ்மாயில் லண்டன் அணியை அழுத்தத்திற்கு தள்ளினார். கடைசிவரை விட்டுக்கொடுக்காத வெல்ஸ் அணி ஒரு பவுண்டரியை கூட கொடுக்காமல் பந்துவீச, இறுதிப்போட்டியானது அதிகப்படியான அழுத்தத்துடன் கடைசிநிமிடங்களை அடைந்தது.

கடைசி 3 பந்துக்கு 4 ரன்கள் என்று இருந்த போட்டியில் பிரஸ்ஸரான நேரத்தில் இறங்கிவந்து சிக்சருக்கு பறக்கவிட்ட இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா, லண்டன் ஸ்பிரிட் அணியை முதன்முறையாக கோப்பைக்கு அழைத்துச்சென்றார். டக்அவுட்டில் அமர்ந்து என்ன நடக்கும் என்று டென்சனுடன் பார்த்துக்கொண்டிருந்த ஸ்பிரிட் அணி வீரர்கள், தீப்திஷர்மாவின் தீரமான செயலை பார்த்து மிரட்சியடைத்தனர்.

the hundred womens final

வெல்ஸ் ஃபையர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய லண்டன் ஸ்பிரிட் அணி 2024 பெண்களுக்கான தி ஹண்ட்ரடு டைட்டிலை தட்டிச்சென்றது.