lokesh pt web
கிரிக்கெட்

டெலிவரி பாய் to நெதர்லாந்தின் நெட் பவுலர்! யார் இந்த லோகேஷ்?

சென்னையை சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞர், இங்கு உணவு டெலிவரிபாயாக இருந்து தற்போது நெதர்லாந்து அணியின் நெட் பவுலராக தேர்வாகியுள்ளார்.

Angeshwar G

50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் நெருங்கிறது. அனைத்து அணிகளும் இதற்காக தயாராகி வருகின்றன. அதேபோல் நெதர்லாந்து அணியும் இந்திய மண்ணில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. இந்திய ஆடுகளங்கள் பொதுவாக சுழலுக்கு ஏற்ற ஆடுகளங்கள் என்பதால் இந்திய சூழலில் பயிற்சி மேற்கொள்ள தங்களுக்கு வலைப்பந்துவீச்சாளர்கள் தேவை என சில தினங்களுக்கு முன் நெதர்லாந்து அணி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்தியா முழுவதிலுமிருந்து இதற்கான விண்ணப்பங்களையும் பெற்றது.

இதனை அடுத்து செப் 19 ஆம் தேதி தேர்வான நான்கு பேரின் பட்டியலை வெளியிட்டது நெதர்லாந்து அணி. விண்ணப்பித்திருந்த 10 ஆயிரம் பேரிலிருந்து இந்த நான்கு பேர் தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு பேரில் சென்னையை சேர்ந்த இடதுகை சைனாமேன் பந்துவீச்சாளரான லோகேஷும் ஒருவர்.

லோகேஷ் சென்னையில் உணவு டெலிவரி செய்பவராக பணியாற்றி வந்தவர். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட லோகேஷ் வேலை செய்து கொண்டே கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் நடத்தும் ஐந்தாவது டிவிஷனில் விளையாடியவர் இவர்.

நெதர்லாந்தின் அறிவிப்பைக் கண்ட லோகேஷ் தனது பந்துவீச்சை வீடியோவாக பதிவு செய்து அனுப்பினார். இந்தியாவில் சைனாமேன் பந்துவீச்சாளர்கள் குறைவு என்பதால் நெதர்லாந்து அணி லோகேஷை தேர்வு செய்துள்ளது. உலகக்கோப்பை தொடர் முழுவதும் நெதர்லாந்து அணியுடன் லோகேஷ் பயணம் செய்யவுள்ளார் லோகேஷ்.