மெஹிதி ஹாசன் - லிட்டன் தாஸ் cricinfo
கிரிக்கெட்

‘ரெண்டே பேரு.. முடிச்சு விட்டாங்க போங்க’ |26/6-லிருந்து 262 ரன்கள் குவித்த வங்கதேசம்! நழுவவிட்ட PAK!

Rishan Vengai

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்ற நிலையில், அபாரமான பேட்டிங்க் மற்றும் பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதெச அணி பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்த வங்கதேசம், பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கும் முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது

pak vs ban

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 274 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கடினமான போராட்டத்திற்கு பிறகு வங்கதேச அணியும் 262 ரன்களை அடித்துள்ளது.

26 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம்..

முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் குவித்த பாகிஸ்தானை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணிக்கு, பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் குர்ரம் ஷாஜாத் வங்கதேசத்தின் டாப் ஆர்டர்களை க்ரீஸில் நிற்கவிடாமல் ஸ்டம்புகளை தகர்த்தெறிந்து வெளியேற்றினார். குர்ரமின் இன்ஸ்விங் டெலிவரிகளை சமாளிக்க முடியாத வங்கதேச டாப் ஆர்டர்கள் வந்தவேகத்திலேயே பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தனர். உடன் குர்ரமுடன் மிர் ஹம்சாவும் இணைந்துகொள்ள 26 ரன்களை எட்டுவதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது வங்கதேச அணி.

டாப் ஆர்டர் வீரர்கள் ஆறு பேரும் 10, 1, 4, 1, 3, 2 என்ற சொற்ப ரன்களில் நடையை கட்ட, எப்படியும் வங்கதேசம் அடுத்த 40 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிடும் என்றே போட்டியை பார்த்த எல்லோருக்கும் தோன்றியது. ஆனால் 7வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹாசன் இருவரும் நம்பிக்கையை கைவிடாமல் இருந்தனர்.

மெஹிதி ஹாசன் - லிட்டன் தாஸ்

இப்போ விக்கெட் விழுந்துடும், இல்ல இப்போ இவரு வந்து விக்கெட்டை வீழ்த்துவாருனு எதிர்ப்பார்த்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து திடமாக நின்று விளையாடிய லிட்டன் மற்றும் மெஹதி இருவரும் பாகிஸ்தான் பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினர். 26 ரன்னிலிருந்து 167 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை ஒருவழியாக மெஹதி ஹாசனை 78 ரன்னில் வெளியேற்றி பிரித்துவைத்தார் குர்ரம் ஷாஜாத்.

லிட்டன் தாஸ்

மெஹிதி வெளியேறினாலும் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் ஆடிய லிட்டன் தாஸ், தன்னுடைய 4வது டெஸ்ட் சதத்தை எடுத்துவந்து அசத்தினார். லிட்டன் தாஸ் 138 ரன்கள் அடித்து வெளியேற 26 ரன்னிலிருந்து முன்னேறி 262 ரன்களை சேர்த்தது வங்கதேச அணி. கையிலிருந்த போட்டியை பாகிஸ்தானை அணி கோட்டைவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஒருவேளை இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் சொதப்பும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக ஒயிட்வாஷுடன் கைப்பற்றும் நிலைக்கு வங்கதேசம் செல்லும்.

சோகம் என்னவென்றால் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் பாகிஸ்தான் அணி 8 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது.