ஐபிஎல் 18-வது சீசன்  முகநூல்
கிரிக்கெட்

ரூ.20 லட்சம் To ரூ10 கோடிக்கு மேல்.. ஒரே சீசனில் ’டாப்’ சம்பளம்! தெறிக்கவிட்ட வீரர்கள் யார், யார்?

ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.

Rajakannan K

ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். மெகா ஏலம் டிசம்பரில் நடக்கிறது.

இந்நிலையில், ஐபிஎல் அணிகள் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலில் பல சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, கடந்த ஐபிஎல் சீசனில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் தற்போது பல கோடிகளுக்கு தக்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரே சீசனில் அவர்கள் உச்சத்திற்கு உயர்ந்துள்ளனர்.

துருவ் ஜூரல்:

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார் துருவ் ஜூரல். இவர் இதுவரை இந்திய அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரையும் 2023 ஆம் ஆண்டு 13 போட்டிகளில் விளையாடி 152 ரன்கள் எடுத்திருந்தார்.

2024 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடி 195 ரன்கள் எடுத்திருந்தார். இதில் இரண்டு அரைசதம் அடங்கும். இத்தகைய சூழலில் கடந்த முறை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட துருவ் ஜூரெல் தற்போது ரூ.14 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இது கடந்த முறையை விட 6900 சதம் அதிக சம்பளம் ஆகும்.

மதீஷா பதிரானா!

சிஎஸ்கே அணியின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் மதீஷா பதிரானா. தன்னுடைய அசத்தலான யார்க்கர் பந்துவீச்சால் பல ஸ்டம்களை பதம் பார்த்தவர். 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கேவில் அறிமுகமான இவர் அடுத்த இரண்டே சீசன்களில் முன்னிணி வீரர்களின் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

2023 ஐபிஎல் சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை அள்ளினார். 2024 ஆம் ஆண்டு 6 போட்டிகள் மட்டுமே விளையாடி 13 விக்கெட்டுகளை சாய்த்தார். இவரும், கடந்த முறை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.13 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இது கடந்த முறையை விட 6400 சதம் அதிக சம்பளம் ஆகும்.

ரஜத் பட்டிதார்!

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான ரஜத் பட்டிதார், 2022 மற்றும் 2024 சீசன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். 2022-ல் 333 ரன்களும், 2024-ல் 395 ரன்களும் எடுத்து ஆர்சிபி-யின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.

கடந்த முறை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், தற்போது 11 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இது கடந்த முறையை விட 5400 சதம் அதிக சம்பளம் ஆகும்.

மயங்க் அகர்வால்!

2011 ஆம் ஆண்டே இவர் ஐபிஎல் சீசனில் அறிமும் ஆகி இருந்தாலும் பெரிதாக சோபிக்கவில்லை. 2019 ஆம் ஆண்டுதாக 332 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். 2020-ல் 424 ரன்களும், 2021-ல் 441 ரன்கள் விளாசி மிரட்டினார். ஆனால், 2022-ல் 196, 2023-ல் 270 என மீண்டும் சறுக்கினார். 2024-ல் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி 64 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

கடந்த சீசனில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது, ரூ.11 கோடிக்கு தக்க வைத்துள்ளது. இது கடந்த முறையை விட 5400 சதம் அதிக சம்பளம் ஆகும்.

சாய் சுதர்ஷன்

தமிழக வீரரான சாய் சுதர்ஷன் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திராக மாறியுள்ளார். 2023 ஐபிஎல் இறுதியில் சாய் சுதர்ஷன் அடித்த ரன்களே அதற்கு சான்று. கிளாசிக்கான ஷாட்களை ஆடக்கூடியவர். தான் அறிமுகமான 2022 ஐபிஎல் சீசனில் 5 போட்டிகளில் 145 ரன்கள் எடுத்திருந்த சுதர்ஷன், அடுத்த இரண்டு போட்டிகளில் எல்லோரும் கவனிக்கும் பேட்ஸ்மேனாக மாறினார்.

2023-ல் 326 ரன்கள் குவித்த இவர், கடந்த சீசனில் 527 ரன்கள் குவித்து அடேங்கப்பா என மலைக்க வைத்தார். சாய் சுதர்ஷன் இறங்கினாலே 30 - 50 ரன்கள் உறுதி என்ற நிலையை உருவாக்கினார். கடந்த முறை ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் தற்போது ரூ.8.50 கோடிகளுக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இது கடந்த முறையை விட 4150 மடங்கு அதிக சம்பளம் ஆகும்.

ஷஷாங் சிங்!

ஒரே சீசனில் ஓகோவென்ற புகழை தொட்டவர் ஷஷாங் சிங். அதற்கு முக்கியமான காரணம் ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த எண்ணங்களை தவிடுபொடியாக்கி தன்னுடைய திறமையால் தான் ஒரு திறமையான வீரர்தான் என்பதை நிரூபித்துக் காட்டினார். அதுவும் வெற்றி பெறவே முடியாது என்று நினைத்த போட்டிகளை தன்னுடைய பேட்டிங்கால் மேஜிக் நிகழ்த்தி வெற்றிக்கோட்டை எட்ட வைத்தவர் ஷஷாங் சிங்.

2022-ல் அறிமுகமான சீசனில் வெறும் 69 ரன்கள் எடுத்ததால் இவர் மீது யாருக்கும் நம்பிக்கை இருந்திருக்க வாய்ப்பில்லை. 2023-ல் விளையடவில்லை. ஆனால், பஞ்சாப் அணிக்காக 2024 சீசனில் 354 ரன்கள் விளாசினார். 21 சிக்ஸர்கள், 28 பவுண்டரிகள் பறக்கவிட்டார். பேட்டிங் சராசரி 44.25 என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் கடந்த முறை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.5.50 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இது கடந்த முறையை விட 2650 மடங்கு அதிக சம்பளம் ஆகும். நிச்சயம் இது அவரது திறமைக்கு கிடைத்த ஊதியமே.

ரிங்கு சிங்!

கொல்கத்தா அணியில் மறக்க முடியாத சம்பவங்களை செய்தவர் ரிங்கு சிங். 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை விளாசி குஜராத் அணியை தோற்கடித்து உலகத்திற்கு தன்னை யார் என்று அறிமுகப்படுத்தியவர். 2018 ஆம் ஆண்டே ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆகி இருந்தாலும் 2022-ல் தான் 174 ரன்கள் எடுத்து மெல்ல வெளியே தெரிய ஆரம்பித்தார்.

ஆனால், ரிங்கு சிங் ருத்ர தாண்டவம் ஆடியது 2023 ஐபிஎல் சீசனில் தான். 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 474 ரன்கள் குவித்தார். பேட்டிங் சராசரி 59.25 என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் ஆட்டம் எப்படி இருந்திருக்கும் என்று. தான் ஒரு மறுக்க முடியாத வீரர் என்ற இடத்தை அந்த சீசன் மூலம் உருவாக்கினார். 2024 சீசனிலேயே நல்ல விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி தரும் வகையில் மீண்டும் ரூ.55 லட்சத்துக்கே கொல்கத்தா ஏலம் எடுக்கப்பட்டார். தற்போது கொல்கத்தா அணியால் ரூ.13 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார்.