ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணிக்கு முன் பல பெரும் சவால்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. அதில் மிகமுக்கிய ஒன்றாக இருப்பது நம்பர் 4 பேட்ஸ்மேன் யார் என்பது. கேஎல் ராகுல் தொடர்ந்து காயமடைந்துகொண்டே இருப்பது பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல் டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாததும் கடந்த சில ஆண்டுகளாகவே விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இது இந்தியாவின் உலகக் கோப்பை வாய்ப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்படுகிறது. நேற்று நடந்த போட்டி இந்த வாதத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.
நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டி மழையால் கைவிடப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடக்கத்தில் மிகவும் தடுமாறிய இந்திய அணி 15வது ஓவருக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷஹீன் அப்ஃரிடிக்கு எதிராக வழக்கம்போல் தடுமாறினார்கள். மூன்றாவது ஓவரிலேயே ஷஹீனின் புயல்வேக பந்துக்கு ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இரண்டு பந்துகளை வெளியே எடுத்துச் சென்ற அஃப்ரிடி, மூன்றாவது பந்தை இன்ஸ்விங் செய்ய, அதை சரியாகக் கணிக்காமல் வெளியேறினார் ரோஹித்.
அடுத்து களமிறங்கிய கோலியும் ஷஹீன் அப்ரிடியின் பந்துவீச்சில் போல்டானார். தேர்ட் மேன் திசையில் பந்தைத் தட்டிவிட நினைத்தவர் இன்சைட் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். இரு பெரும் வீரர்களும் இடது கை வேகப்பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. ஏனெனில் காலம் காலமாகவே இந்திய வீரர்கள் இப்படி இடது கை வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்குத் தடுமாறி ஆட்டமிழந்துகொண்டே இருக்கிறார்கள். ஷஹீன் அஃப்ரிடிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் ஆட்டம் கண்டவர்கள், 2019 உலகக் கோப்பையில் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் தடுமாறினார்கள். இந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் பிரச்சனை இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
அணியில் எல்லோரும் வலது கை பேட்ஸ்மேன்களாகவே இருப்பது, அந்த இடது கை பௌலர்களுக்குக் கூடுதல் சாதகமாக அமைந்துவிடுகிறது என்கிறார்கள் வல்லுநர்கள். போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்தபோது போட்டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சியுடன் பேசிய இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த், ஒரு இடது கை ஓப்பனருடன் களமிறங்குவது இந்தப் பிரச்சனையை சமாளிக்க உதவும் என்று கூறினார். இஷன் கிஷன் போன்ற ஒரு வீரர் ஓப்பனராகக் களமிறங்கி அதிரடியாக அந்த பௌலர்களை அணுகும்போது பௌலர்களின் ரிதம் பாதிக்கப்படும் என்று அவர் கூறினார். ஆனால் இந்திய அணியால் அவரை ஓப்பனராக களமிறக்க முடியாதே! ரோஹித் - கில் இணை தான் ஓப்பனிங் கூட்டணி என்பது உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இஷனுக்கு டாப் ஆர்டரில் இடம் கிடைக்காது.
நேற்றைய போட்டியில் ஐந்தாவது வீரராகக் களமிறங்கிய இஷன் கிஷன் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டு எழ மிக முக்கியக் காரணமாக விளங்கினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து 138 ரன்கள் சேர்த்தார் அவர். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் இஷன். ஒருவேளை கேஎல் ராகுல் உலகக் கோப்பைக்கு முன் ஃபிட் ஆகவில்லை என்றால் இவரை அந்த இடத்தில் களமிறக்கலாம் என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறது இந்த இன்னிங்ஸ். அதன்மூலம் குறைந்தபட்சம் மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பார். இருந்தாலும் டாப் ஆர்டரின் இடது கை பௌலர் பிரச்சனை நிச்சயம் தீரப்போவதில்லை.
இந்த உலகக் கோப்பையில் பங்குபெறும் பெரும்பாலான அணிகளில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா - மிட்செல் ஸ்டார்க்
பாகிஸ்தான் - ஷஹீன் அஃப்ரிடி
நியூசிலாந்து - டிரென்ட் போல்ட்
வங்கதேசம் - முஸ்தாஃபிசுர் ரஹ்மான்
ஆப்கானிஸ்தான் - ஃபசல்ஹக் ஃபரூகி
இலங்கை - தில்ஷன் மதுஷன்கா
ஸ்டார்க், அஃப்ரிடி, போல்ட் போல் மற்ற பௌலர்கள் பெரிய தாக்கம் ஏற்படுத்திவிட முடியாதுதான். இருந்தாலும் ஆடுகளம் சாதகமாக இருக்கும்பட்சத்தில் ஸ்விங் செய்யக்கூடிய இடது கை பௌலர்கள் நிச்சயம் இந்திய டாப் ஆர்டரை ஆட்டிப் படைக்கக் கூடும்! இதை இந்திய வீரர்கள் எப்படி கையாளப்போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்.
இன்னொரு கொடுமையான விஷயம் என்னவெனில், இந்திய உலகக் கோப்பை அணியில் இடது கை வேகப்பந்துவீச்சாளரும் கூட இடம்பெறப்போவதில்லை!