2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் 5 முறை சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுகிறது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டி வரும் அக்டோபர் 8ஆம் தேதி பகல் இரவு ஆட்டமாக நடக்கவிருக்கிறது.
நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா வெற்றிபெற்ற நிலையில், நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டியிலும் இந்தியாவே வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.ஆனால் தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் 352 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முடிவோடு காத்திருக்கிறது.
ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை பொறுத்தவரையில் இரண்டு அணிகளும் 12 முறை மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 8 போட்டிகளில் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. கடைசி உலகக்கோப்பை போட்டியில், ஓவல் லண்டனில் ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது இந்திய அணி.
இந்தியா-ஆஸ்திரேலியா உலகக்கோப்பை மோதலுக்கு முன்னதாக இந்திய அணி குறித்து பேசியிருக்கும் ஆஸ்திரேலிய இளம் வீரர் மார்னஸ் லபுசனே, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
எப்போதும் ரோகித்தை கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வீரராக பார்ப்பதாக தெரிவித்திருந்த லபுசனே, தற்போதும் அவரை புகழ்ந்துள்ளார். ஃபோக்ஸ் கிரிக்கெட்டுடன் பேசுகையில், “ஒரு வீரர் எந்த பெரிய ரிஸ்கான ஷாட்களையும் விளையாடாமல் ரன்களை குவிப்பார் என்றால் அது ரோகித் சர்மா தான். அவர் அடிக்க ஆரம்பித்து விட்டால் ரோகித்தை தடுத்து நிறுத்துவது என்பது மிகவும் கடினமான விசயம்” என்று புகழ்ந்துள்ளார்.
கடந்த முறை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் டிரோபியில் விளையாடிய லபுசனே அப்போதும் ரோகித்தை புகழ்ந்திருந்தார். அப்போது பேசியிருந்த அவர், “ஒரு முறை ரோகித்திடம் இதை நேராகவே சொன்னேன். இந்திய கண்டிசனில் நீங்கள் மிகவும் சிறந்தவர், நீங்கள் என்ன செய்தாலும் நான் அதை பின் தொடர்கிறேன். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.