Krishnamachari Srikkanth web
கிரிக்கெட்

“ஒன்றுமில்லாத வீரர்களை மிகைப்படுத்துகிறோம்”! - இந்திய அணியை விளாசிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்!

கோலி தலைமையிலான அணிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி எதுவும் செய்யவில்லை என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சாடியுள்ளார்.

Rishan Vengai

31 ஆண்டுகாலமாக தென்னாப்பிரிக்கா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்லமுடியாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது. தோனி தலைமையிலான 2010 இந்திய அணி மட்டுமே 1-1 என தொடரை சமன்செய்துள்ளது. மற்றபடி ஒருமுறை கூட இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வெற்றிகண்டதில்லை. பெரும் எதிர்ப்பார்ப்போடு சென்ற கோலி தலைமையிலான அணியும் 1-2 என போராடி தொடரை இழந்தது.

gill

இந்நிலையில் இந்த முறை தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி, தொடரில் 1-0 என முன்னிலை வகித்து இந்திய அணியின் கனவில் மண்ணை வாரி போட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்திய அணியை "OverRated" என விளாசியுள்ளார் முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

“ஒன்றுமில்லாத வீரர்களை மிகைப்படுத்துகிறோம்”! - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் பேசியிருக்கும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளோம். விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த 2-3 வருடம் தான் இந்திய அணி சிறப்பான காலகட்டத்தில் இருந்தது. அப்போது நாம் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தினோம், தென்னாப்பிரிக்காவில் கடுமையாகப் போராடினோம், ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றோம். ஆனால் அதற்கு பிறகான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எதுவும் பெரிதாக செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.

ashwin - shardul thakur

மேலும் சிறப்பாக செயல்படாத இந்திய அணியை சாடியிருக்கும் அவர், “நீங்கள் முதலில் ஐசிசி ரேங்கிங்கை மறந்துவிட வேண்டும். ஏனென்றால் விளையாடிய தொடரில் எல்லாம் உங்களால் 1-2, 1-2 என மட்டுமே முடிக்க முடிந்துள்ளது. இதற்கு காரணம் நம்மிடையே அதிகமாக மிகைப்படுத்தப்பட்ட வீரர்களும், அவர்களுடைய திறமைக்கு தகுந்தார் போல் விளையாடாத வீரர்களும் இருப்பது தான். மேலும் குல்தீப் யாதவ் போன்ற திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் போனதும் இந்த நிலைமைக்கு காரணம்” என்று விளாசியுள்ளார் சீக்கா.