virat kohli X
கிரிக்கெட்

அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் கோலி விளையாடமாட்டார்..? கே.எல்.ராகுல், ஜடேஜா, சிராஜ் திரும்ப வாய்ப்பு?

Rishan Vengai

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகினார். ஆனால் அவரின் விலகலுக்கான காரணத்தை பிசிசிஐ பகிரவில்லை. மாறாக யாரும் அவர் விலகியதற்கான காரணத்தை யூகிக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் பிசிசிஐ முன்வைத்தது.

ஆனால் அந்தநேரத்தில் ராமர் கோயில் திறப்பு, இந்தியாவின் வரலாற்று டெஸ்ட் தோல்வி, பொதுவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி விராட் கோலி மனிதர் என தொடர்ந்து விராட் கோலியின் இருப்பு கேள்விக்குறியாக இருந்துவந்தது.

விராட் கோலி

கோலி அணியுடனும் இல்லை, வெளியிலும் இல்லை எங்குதான் இருக்கிறார் என்ற கேள்வியும், அவர் இந்தியாவிலேயே இல்லை என்ற செய்தியும், அதற்கும் மேலாக விராட் கோலியின் அம்மா உடல்நலக்குறைவாக இருக்கிறார் என்ற வதந்தியும் வேகமாக பரவின.

இதற்கிடையில் வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா தம்பதி இருவரும் தங்களுடைய இரண்டாவது குழந்தையை எதிர்ப்பார்க்கின்றனர் என்று கோலியின் நண்பரான டி வில்லியர்ஸ் யூ-டியூப் வீடியோவில் வெளிப்படுத்தினார். ஆனாலும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் மௌனம் காத்த நிலையில், டி வில்லியர்ஸ் அவர் பதிவிட்ட வீடியோவையே டெலிட் செய்துவிட்டார்.

கோலி - அனுஷ்கா

இந்நிலையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் விராட் கோலி கிடைக்கமாட்டார் என கிறிக்இன்ஃபோ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கடைசி போட்டிக்கும் திரும்புவது நிச்சயமற்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

கேஎல் ராகுல், ஜடேஜா, சிராஜ் திரும்ப வாய்ப்பு!

ESPNcricinfo அறிக்கையின்படி, ”பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சிகிச்சையில் இருந்துவரும் காயமடைந்த வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். NCA பிசியோவின் இறுதி அறிக்கை இன்னும் வெளியிடப்படாமால் இருந்துவருகிறது. ஆனால் ராஜ்கோட்டில் நடைபெறவிருக்கும் 3வது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் ஒருவார காலம் இருப்பதால், இரண்டு வீரர்களும் திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படியில்லையேல் இரண்டு வீரர்களில் ஒருவர் நிச்சயம் திரும்புவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா, கேஎல் ராகுல் இருவரும் திரும்பும் பட்சத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கானது வலுப்பெறும்.

KL Rahul

மேலும் முகமது சிராஜை பொறுத்தவரையில், தனது பணிச்சுமை காரணமாக இரண்டாவது போட்டிக்கு முன்னதாக அணியிலிருந்து விலக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மூன்றாவது போட்டிக்கு நிச்சயம் திரும்புவது உறுதியாகியுள்ளது. சிராஜ் அணிக்கு திரும்புவது நிச்சயம் பெரிய ஊக்கமாக இருக்கும். அவருக்குப் பதிலாக களமிறங்கிய முகேஷ் குமார் இரண்டாவது டெஸ்ட் முழுவதும் போராடினார். 12 ஓவர்களில் 70 ரன்கள் விட்டுக்கொடுத்த அவரால் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுக்க முடிந்தது. தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.