இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலிரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், முதல் போட்டியில் இங்கிலாந்தும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன்செய்துள்ளன.
இந்நிலையில், முதலிரண்டு போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்ட விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் கிடைக்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்தது. அதே அறிவிப்பில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் சிகிச்சையில் இருந்த ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் திரும்புவார்கள் என்றும், ஸ்ரேயாஸ் ஐயர் தொடரிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தது.
கோலி இல்லாத சூழலில் ராகுல், ஜடேஜா திரும்புவது மிடில் ஆர்டர் வரிசையை பலப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கேஎல் ராகுல் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாற்றார் என்று அறிவித்துள்ளது.
பிசிசிஐ அறிவித்திருக்கும் அறிவிப்பில், “முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த கேஎல் ராகுல், எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான உடற்தகுதிக்கு என்சிஏ-ல் சிகிச்சை பெற்றுவந்தார். தற்போது வரை 90% மட்டுமே குணமடைந்திருக்கும் ராகுல், மூன்றாவது போட்டியில் கிடைக்கமாட்டார் என மருத்துவ குழு தெரிவித்துள்ளது. அதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ராகுல் விலகுகிறார், அவருக்கு மாற்று வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), ரவி அஷ்வின், ரவீந்திர ஜடேஜா*, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், தேவ்தத் படிக்கல்.
கேஎல் ராகுலின் திடீர் நீக்கத்தால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக தெரியும் நிலையில், சர்பராஸ் கான் அல்லது துருவ் ஜுரேல் இரண்டு பேரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர் என்பதால் அவருக்கு 3வது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் இடமிருக்காத சூழலே இருக்கும்.
இந்நிலையில், மிடில் ஆர்டர் வீரர்களான சர்பராஸ் கான் மற்றும் துருவ் இருவரில் யாருக்கு அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடும் கிடைக்கும் என்பது தெரியவில்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே சர்பராஸ் கானுக்கு பதிலாக ரஜத் பட்டிதார் தேர்ந்தெடுக்கப்பட்டது விமர்சனத்துக்குள்ளான நிலையில், நிச்சயம் சர்பராஸ் கானுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் கேஎஸ் பரத்துக்கு பதிலாக துருவ் களமிறக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்ற கருத்தும் இருந்துவருகிறது. ஒருவேளை கேஎஸ் பரத் இடம்பெறாத சூழலில் சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் இருவரும் அறிமுக போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.