கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் cricinfo
கிரிக்கெட்

1986க்கு பிறகு முதல் முறை; ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை படைத்த கே.எல்.ராகுல் - ஜெய்ஸ்வால் ஓப்பனிங் ஜோடி!

இந்தியாவின் தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தியுள்ளனர்.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாள் (நேற்று) முடிவில் 67 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்தது.

பும்ரா - ஸ்மித்

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 104 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

172/0 என மிரட்டிவரும் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால்!

46 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிவருகிறது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அடுத்தடுத்து அரைசதமடித்து விளையாடி வருகின்றனர்.

விக்கெட்டையே இழக்காத இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 172/0 என முடித்துள்ளது. 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் ஜெய்ஸ்வால் 90* ரன்களும், 4 பவுண்டரிகளுடன் கேஎல் ராகுல் 62* ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடிவருகின்றனர்.

1986-க்கு பிறகு முதல்முறையாக சாதனை!

ஆஸ்திரேலியா மண்ணில் தொடக்க வீரர்களாக முதல் விக்கெட்டுக்கு 172 ரன்கள் குவித்து விளையாடிவரும் கேஎல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி, 1986-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்களை பதிவுசெய்துள்ளது.

kl rahul - jaiswal

இதற்குமுன் 1986-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்க ஜோடியான சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அடித்த 191 ரன்களே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்துவரும் நிலையில், கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி இரண்டாவது அதிகபட்ச தொடக்க பார்ட்னர்ஷிப்பை பதிவுசெய்து அசத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய தொடக்க ஜோடி ஆஸ்திரேலியா மண்ணில் 100 ரன்களை கடந்திருப்பது இதுவே முதல்முறை. உடன் SENA நாடுகளில் அதிகபந்துகளை சந்தித்த முதல் இந்திய ஜோடி என்ற சாதனையையும் கேஎல் ராகுல்-ஜெய்ஸ்வால் ஜோடி படைத்து அசத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய தொடக்க ஜோடி பார்ட்னர்ஷிப்:

1986 - சுனில் கவாஸ்கர் - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் - 191 ரன்கள்

1981 - சிபிஎஸ் சவுகான் - எஸ்எம் கவாஸ்கர் - 165 ரன்கள்

2003 - ஆகாஷ் சோப்ரா - விரேந்தர் சேவாக் - 141 ரன்கள்

1948 - எம்.எச்.மன்காட் - சி.டி.சர்வதே - 124 ரன்கள்

2004 - ஆகாஷ் சோப்ரா - விரேந்தர் சேவாக் - 123 ரன்கள்

2024 - யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் - 172* ரன்கள்