ind  X
கிரிக்கெட்

”IPL தொடரால் முதல்தர கிரிக்கெட் தேவையில்லை என நினைக்கிறார்கள்”! - BCCI முடிவில் கபில்தேவ் மகிழ்ச்சி!

முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முக்கியத்துவம் அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கபில்தேவ் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுடனான 2023-2024 ஆண்டுக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தை கடந்த புதன்கிழமையன்று வெளியிட்டது. இந்தப்பட்டியலில் பெரும்பான்மையான வீரர்கள் தங்களுடைய இடத்தை தக்கவைத்துக்கொண்ட போதிலும், கடந்தாண்டு B மற்றும் C பிரிவுகளில் இணைக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் இந்தாண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

அவர்களுடைய ஒப்பந்த நீக்குதலுக்கு காரணமாக வீரர்கள் முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டை பிசிசிஐ முன்வைத்தது. அதுமட்டுமல்லாமல் அனைத்து வீரர்களும் தேசிய போட்டிகளில் விளையாடாதபோது நிச்சயம் முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும் என்ற பரிந்துரையையும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

shreyas - ishan

இந்நிலையில் உலகக்கோப்பையில் 530 ரன்கள் அடித்த வீரர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த திறமையான வீரர்கள் இருவரையும் இப்படி தடாலடியாக தகுதிநீக்கம் செய்வது அதிகப்படியான தண்டனை என பலர் ஸ்ரேயாஸ் மற்றும் இஷான் கிஷனுக்கு ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சாரார் பிசிசிஐ-ன் இந்த நடவடிக்கை சரியானதுதான் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ்வும் பிசிசிஐ-ன் நடவடிக்கையில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தேசிய கிரிக்கெட்டுக்கு எது நல்லதோ அதில் எப்போதும் மகிழ்ச்சி!

பிசிசிஐ முதல்தர கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்திருக்கும் கபில்தேவ், நாட்டை விட யாரும் பெரியவர்கள் இல்லை என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசியிருக்கும் கபில்தேவ், “முதல் தர கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு படி முன்னேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வீரர்கள் நிச்சயம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும். அது தான் நாட்டுக்கு நல்லது, நாட்டிற்கு நல்லது எதுவாக இருந்தாலும், அதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதில் சில வீரர்கள் கஷ்டப்பட்டாலும், விளையாட்டையும் நாட்டையும் விட யாரும் பெரியவர்கள் இல்லை” என்று கபில்தேவ் பிடிஐ உடன் தெரிவித்துள்ளார்.

கபில்தேவின் 1983 உலகக் கோப்பையின் சக அணி வீரர் மதன் லாலும் இதே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருந்தார். அவர் பேசுகையில், “பிசிசிஐ முதல்தர கிரிக்கெட்டை விளையாடச் சொன்னால், வீரர்கள் சென்று விளையாடியிருக்க வேண்டும். விளையாட்டை விட யாரும் பெரியவர்கள் இல்லை, முதல்தர கிரிக்கெட் விளையாடுவதை கட்டாயம் ஆக்கியதற்கு பிசிசிஐ-க்குத்தான் கிரிடிட் கொடுக்க வேண்டும். இப்போதெல்லாம் ஐபிஎல் காரணமாக முதல் தர கிரிக்கெட்டை வீரர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்” என்று லால் கூறியுள்ளார்.