ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி. ஒருகாலத்தில் கிரிக்கெட் உலகில் கொடிகட்டிப் பறந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் இப்போதைய நிலை ரசிகர்கள் மத்தியில் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. அந்த அணியின் சரிவைக் கண்டு மற்ற நாட்டு கிரிக்கெட் அணி வீரர்களும் வருத்தமடைந்துள்ளனர்.
இதுவரை ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளில் 6 கோப்பையைக் கைப்பற்றியுள்ளது வெஸ்ட் இண்டீஸ். 1975, 1979-ல் ஒருநாள் கிரிக்கெட் கோப்பை, 2012, 2016-ல் ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2004-ல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை, ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் கோப்பை என 6 கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளது அந்த அணி. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சி 3 உலகக் கோப்பை போட்டியின் இறுதிச் சுற்று வரை (1975, 1979, 1983) முன்னேறி சாதனை படைத்தது அந்த அணி. மேலும், இரு முறை உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது.
ஆனால் இப்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிலை தலைகீழாகிவிட்டது. இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகள் அனைத்திலும் அந்த அணி தகுதி பெற்றது. ஆனால் இந்த ஆண்டில் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதானச் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச் சுற்று சூப்பர் 6 சுற்றில் ஸ்காட்லாந்திடம் தோல்வி கண்டு உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீழ்ச்சி குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், அந்த அணி விரைவில் மீண்டெழும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கபில்தேவ் கூறுகையில், “உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடாதது வேதனை அளிக்கிறது. அவர்கள் இல்லாத ஒருநாள் போட்டியை கற்பனை செய்வது கடினம். அத்தகைய சிறந்த வீரர்களை உருவாக்கி வைத்திருக்கும் அணி அது. இப்போது அந்த அணி வீரர்கள் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், அவர்கள் மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.