பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்றபோட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, சாத் ஷகீல் (141 ரன்கள்) மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (171* ரன்கள்) இருவரின் அபாரமான ஆட்டத்தால் 448 ரன்களை குவித்தது. போதுமான ரன்களை எடுத்துவிட்டதாக நினைத்த பாகிஸ்தான் கேப்டன் முன்னதாகவே டிக்ளர் செய்தார்.
ஆனால் பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்து விளையாடிய வங்கதேச அணி முஸ்பிகுர் ரஹீம் 191 ரன்கள் ஆட்டத்தின் உதவியால் 117 ரன்கள் முன்னிலையுடன் 565 ரன்கள் குவித்தது. 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய வங்கதேச ஸ்பின்னர்கள் விக்கெட் வேட்டை நடத்தினர். மெஹிதி ஹாசன் 4 விக்கெட்டுகள் மற்றும் மூத்த ஸ்பின்னர் ஷாகிப் 3 விக்கெட்டுகளும் வீழ்த்த 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது பாகிஸ்தான் அணி.
பின்னர் 30 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாறு படைத்தது. முதல்முறையாக பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது மட்டுமில்லாமல், அதை அவர்களின் சொந்த மண்ணில் வைத்து சம்பவம் செய்து வங்கதேச அணி, பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது.
பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வி குறித்து பேசியிருக்கும் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல், பாகிஸ்தானின் கிரிக்கெட் தொடர்ச்சியாக மோசமாக செயல்படுவது குறித்து வேதனை தெரிவித்தார்.
தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசியிருக்கும் அவர், “ரிஸ்வான் 50 ரன்கள் எடுத்து ஸ்கோர்போர்டை உயர்த்தாமல் இருந்திருந்தால், நீங்கள் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்றிருப்பீர்கள். கடந்த 5 ஆண்டுகளாக நீங்கள் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் ஜிம்பாப்வேயிடம் தோற்றீர்கள். அதுமட்டுமில்லாமல் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டீர்கள், டி20 உலகக் கோப்பையில் அவமானப்படுத்தப்பட்டீர்கள், பாகிஸ்தான் கிரிக்கெட்டை முற்றிலுமாக கேலிக்கூத்தாக்கி வருகின்றீர்கள்.
வங்கதேசத்திற்கு இது கடினமான நேரமாக இருந்தாலும், அவர்களது பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்தது மட்டுமில்லாமல் போட்டியையும் வென்றுகொடுத்துள்ளனர். அவர்கள் உண்மையில் பாகிஸ்தானின் மோசமான கிரிக்கெட்டை அம்பலப்படுத்தியுள்ளனர்.
எங்கள் வீரர்கள் கிளப் கிரிக்கெட் வீரர்களைப் போல் பேட்டிங் செய்தனர். மன்னிக்கவும், கிளப் கிரிக்கெட் வீரர்கள் கூட இப்படி மோசமாக விளையாடமாட்டார்கள். அணியின் அணுகுமுறை மோசமாக இருந்தது. டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும் வீரர்கள் சிரித்துகொண்டிருக்கிறார்கள், யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும், ஏனென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் எந்த தீவிரமும் இல்லை. நீங்கள் வேடிக்கைக்காக மட்டும்தான் விளையாடுகிறீர்கள் என்று தெரிகிறது” என வேதனையை பதிவுசெய்துள்ளார்.