தற்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டால் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் முதலிய வீரர்களின் பெயர்களுக்கு போட்டியாக ஜோ ரூட் என்ற பெயர்தான் முதலில் வந்து நிற்கும். அப்படி ஒரு பாரம்பரியத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் வைத்திருக்கும் ஜோ ரூட், தன்னுடைய பெயரில் தற்போது மிகப்பெரிய மகுடத்தை சூட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் சதமடித்திருக்கும் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 34வது சதத்தை பதிவுசெய்து வரலாறு படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் 143 ரன்கள் மற்றும் கஸ் அட்கின்ஸன் 118 ரன்கள் என்ற இரண்டு அபாரமான சதத்தின் உதவியால் 427 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி 196 ரன்களுக்கு சுருண்டது.
அதனைத்தொடர்ந்து 231 ரன்கள் முன்னிலையுடன் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியில், தன்னுடைய சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து அசத்தினார். இது அவருடைய டெஸ்ட் கிரிக்கெட்டில் 34வது சதமாக பதிவுசெய்யப்பட்டது.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற அலைஸ்டர் குக்கின் (33 சதங்கள்) சாதனையை முறியடித்து, 34 சதங்களுடன் அதிக டெஸ்ட் கிரிக்கெட் சதங்கள் அடித்த ஒரே இங்கிலாந்து வீரர் என்ற மகுடத்தை அடைந்துள்ளார் ஜோ ரூட்.
34வது டெஸ்ட் சதமானது ஜோ ரூட்டுக்கு 50வது சர்வதேச சதமாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் 16 என மொத்தமாக 50 சர்வதேச சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
இதன்மூலம் 50 சர்வதேச சதங்கள் அடித்த 8 உலக வீரர்களுடன் 9வது வீரராக இணைந்துள்ளார் ஜோ ரூட்.
அதிக சர்வதேச சதங்கள் அடித்தவர்கள்:
100 - சச்சின் டெண்டுல்கர்
80* - விராட் கோலி
71 - ரிக்கி பாண்டிங்
63 - குமார் சங்கக்கார
62 - ஜாக் காலிஸ்
55 - ஹாஷிம் ஆம்லா
54 - மஹேல ஜயவர்தன
53 - பிரையன் லாரா
50* - ஜோ ரூட்