joe root - sachin web
கிரிக்கெட்

“திடீரென நான் மோசமாக கூட விளையாடலாம்” - சச்சின் சாதனையை உடைப்பீர்களா என்ற கேள்விக்கு ஜோ ரூட் பதில்!

Rishan Vengai

33 வயதாகும் ஜோ ரூட் மேலும் 3 அல்லது 4 ஆண்டுகள் விளையாட முடியும் என்பதால், சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களை குவித்து முன்னிலையில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டுக்கு 3,981 ரன்கள் மட்டுமே மீதமுள்ளன.

sachin

சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 178 பந்துகளில் 122 ரன்களை விளாசிய ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,940 ரன்களை எட்டி இலங்கையின் மஹிலா ஜெயவர்த்தனே (11,814) மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஷிவ்நரைன் சந்தர்பால் (11,867) முதலிய ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி, டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது அதிகரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இது ஜோரூட்டுக்கு 32வது டெஸ்ட் சதமாக பதிவுசெய்யப்பட்டது.

ஜோ ரூட்

தற்காலத்தில் கிரிக்கெட் விளையாடும் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் முதலிய ஸ்டார் வீரர்களை ஒப்பிடுகையில், ஜோ ரூட்டுக்கு வயதும் நேரமும் இருக்கிறது என்பதால் சச்சினின் அதிக ரன்கள் என்ற டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை ரூட்டால் உடைக்க முடியும் என மைக்கேல் வாகன் முதலிய முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திடீரென நான் மோசமான ஃபார்மிற்கு கூட செல்லலாம்..

ஸ்கை ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலில் பேசியிருக்கும் ஜோ ரூட்டிடம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பயணம் குறித்தும், எல்லா காலத்திலும் சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் இருப்பதற்கான அவரது உணர்வுகள் குறித்தும் கேட்கப்பட்டது.

அப்போது பதில் பேசிய அவர், “இந்தியாவிற்கு எதிராக நாக்பூரில் நான் முதல் போட்டியில் விளையாடிய போது, இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஒரு போட்டியில் விளையாடியதிலேயே நான் மகிழ்ச்சியடைந்தேன். பல அற்புதமான வீரர்களுடன் நீங்களும் இருப்பதற்கு உங்களை கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்த வேண்டும், தற்போது அடைந்திருக்கும் இடத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் நான் மிகவும் அடக்கமாக இருக்க விரும்புகிறேன்” என்று ரூட் கூறினார்.

ஜோ ரூட்

மேலும் சச்சினின் அதிக டெஸ்ட் ரன்கள் சாதனையை உடைக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “யாருக்குத் தெரியும்? இதையெல்லாம் பேசிவிட்டு நான் திடீரென மோசமான ஃபார்மிற்கு சென்றுவிடலாம், அடுத்தடுத்த ஆட்டங்களில் என்ன நடக்கப்போகிறது என்று உங்களுக்கு தெரியாது. நீங்கள் செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு அடியாக முன்வைத்து உழைத்துக்கொண்டே இருங்கள், உண்மையில் உங்களுக்கான இடத்தை சென்று நீங்கள் அடைவீர்கள்" என்று கூறினார்.