jhulan goswami  web
கிரிக்கெட்

15 வயதில் கனவை துரத்திய கிராமத்து சிறுமி, உலக கிரிக்கெட்டின் அடையாளமாக மாறிய வரலாறு! #JhulanGoswami

பெண்கள் கிரிக்கெட்டின் க்ளென் மெக்ராத், பெங்கால் எக்ஸ்பிரஸ், சக்தா எக்ஸ்பிரஸ் என்றெல்லாம் கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்படும் ஜுலன் கோஸ்வாமி, அதிகம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படாத ஒரு கிரிக்கெட் பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும்.

Rishan Vengai

கிரிக்கெட் இந்திய தேசத்தின் ஒரு உணர்வாகவே கொண்டாடப்படுகிறது. கிரிக்கெட்டில் இந்திய அணி கோப்பை வென்றுவிட்டால் அதை தங்களுடைய அதீத வெற்றியாக கொண்டாடித்தீர்க்கும் இந்திய ரசிகர்கள், இந்திய அணி கோப்பை வெல்லாமல் போனால் தங்களுடைய வாழ்க்கையே போய்விட்டதைப் போல் ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்றுவிடுவார்கள். அந்தளவு கிரிக்கெட்டை வாழ்வின் ஒரு பகுதியாகவும், உயிரோட்டமாகவும் நேசிக்கும் ஒவ்வொரு இந்திய ரசிகருக்கும் யாரோ ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமே ஹீரோவாகவும், இன்ஸ்பிரேஷனாகவும் மாறியிருப்பார்கள். கபில்தேவ், கங்குலி, சச்சின், தோனி, கோலி என வந்தாலே அதை திருவிழாவாக கொண்டாடும் ஒரு கிரிக்கெட் நாட்டில் அதிகம் கொண்டாடப்படாத, கொண்டாடப்பட வேண்டிய ஒரு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் என்றால் அது ஜுலன் கோஸ்வாமிதான்.

மேற்கு வங்கத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் 1982-ல் பிறந்து, கிரிக்கெட்டே அதிகம் பரிட்சயம் இல்லாத காலகட்டத்தில் 15 வயதில் தொடங்கிய ஒரு சிறுமியின் கனவுப்போராட்டம், உலக நாடுகள் போற்றும் வகையிலும், தன் நாட்டின் அரசே அழைத்து பத்மஸ்ரீ வழங்கும் நிலையிலும் சென்று முடிந்தது என்றால் அது ஒரு வரலாறுதானே. உலக கிரிக்கெட்டில் எந்த ஒரு பெண் கிரிக்கெட்டரும் செய்யாத இமாலய சாதனைகளை குவித்த ஒருவரை நாம் எந்தளவு கொண்டாடித்தீர்க்க வேண்டும்.

ஈடன் கார்டனில் விழுந்த கிரிக்கெட் விதை!

1997 பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த கோப்பை வெல்லும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூசிலாந்தின் கனவுக்கோப்பைக்காக பவுண்டரிகளாக விரட்டிக்கொண்டிருந்த டெபி ஹாக்ளியின் பந்துகளை எல்லாம் ஒரு சிறுமியின் கைகள் எல்லைக்கோட்டுக்கு அருகில் நின்று பொறுக்கிப் போட்டுக்கொண்டிருந்தது. சதத்தை நோக்கி சென்ற ஹாக்ளியின் விக்கெட்டை வீழ்த்திய ஆஸ்திரேலியா, ஆட்டத்தில் ஒரு பெரிய ஆரவாரத்தை செய்தது. அதற்கு பிறகு இரண்டாவது பேட்டிங்கில் ஆஸ்திரேலியா கேப்டன் பெலிண்டா கிளார்க் ஒரு தீப்பொறியை பற்றவைக்க, தொடர்ந்து வந்த மற்றவீரர்கள் ஆஸ்திரேலியாவை கோப்பைக்கு அழைத்துச்சென்றனர். மிகப்பெரிய கிரிக்கெட் மோதலை முதன்முதலாக வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த அந்த பந்து பொறுக்கும் சிறுமிக்கு கிரிக்கெட்டை நாமும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் உயிர்த்தோன்றியது. 15 வயதில் அன்று பந்தை பொறுக்கிப்போட்ட சிறுமி வேறு யாரும் அல்ல நம் இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட்டர் ஜுலன் கோஸ்வாமிதான்.

jhulan goswami

15 வயதில் எல்லாம் மற்ற கிரிக்கெட்டர்கள் தொழில்முறை கிரிக்கெட்டர்களாகவே மாறியிருப்பார்கள். ஆனால் அதுவரை கிரிக்கெட்டே பெரிதாக பரிட்சயம் இல்லாத சிறுமி கோஸ்வாமிக்கு அப்போதுதான் கிரிக்கெட் ஆடவேண்டும் என்ற ஆசையே எழுகிறது. அந்த வயதில் முளைத்த கனவிற்காக அவள் எவ்வளவு தூரம் ஓட வேண்டும், எவ்வளவு வேகம் ஓட வேண்டும் என்ற விகிதம் அதிகமாகவே இருந்தது. ஆனால் அடுத்த 4 வருடத்திற்குள்ளாகவே தன் கனவை எட்டிப்பிடித்த அந்த சிறுமியின் கால்கள் புது வரலாறு எழுத வேகம் எடுத்தது. 1997-ல் கண்ட கனவை 2002-ஆம் ஆண்டு நிஜமாக்கினார் ஜுலன் கோஸ்வாமி. உலக கிரிக்கெட்டில் 355 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பெண் பந்துவீச்சாளர் இந்திய கிரிக்கெட்டில் 2002-ல் அறிமுகம் ஆனார். தன் கனவை எட்டிப்பிடிப்பதற்கான ஓட்டத்தில் சிறுமி கோஸ்வாமி பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமில்லை.

ஒரே ஒரு டிரெய்ன்தான்! அதை விட்டால் அன்றைய பயிற்சி அவ்வளவுதான்!

கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்ற ஆசையில் அருகில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களிடம் கெஞ்சிக்கேட்டு விளையாடுவாராம் கோஸ்வாமி. ஆனால் "நீ மிகவும் பொறுமையாக பந்துவீசுகிறாய் எங்களுக்கு வேண்டாம், ஒருவேளை ஆல்ரவுண்டராக இருந்தால் கூட சேர்த்துக்கொள்ளலாம்" என சிறுவர்கள் கூற, பந்துவீச்சில் வேகமாக வீச இரவில் யாரும் இல்லாத போது கிரிக்கெட்டை விளையாடுவாராம் ஜுலன். வேகமாக பந்துவீசுவது மட்டுமல்லாமல், தான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காக ஒரு ஆல்ரவுண்டராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார் கோஸ்வாமி.

jhulan goswami

தன்னுடைய கிராமத்தில் விளையாடினால் அப்படியே விளையாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான் என முடிவுசெய்த அவர், கிரிக்கெட் அகாடமியை தேடும் முயற்சியில் இறங்கினார். சுற்றுவட்டாரத்தில் எங்கும் இல்லாத நிலையில் தன்னுடைய கிராமமான சக்தாஹாவில் இருந்து 80 கி.மீ தூரம் தள்ளி இருக்கும் கொல்கத்தாவில் பயிற்சி எடுக்க முடிவுசெய்தார். அந்தக் காலகட்டத்தில் பெண்கள் கிரிக்கெட் என்றால் அவர்கள் எல்லாம் கிரிக்கெட் ஆடுவார்களா? என கேட்கும் சூழ்நிலையில் அதிகம் கவனிக்கப்படாத ஒரு விளையாட்டை நோக்கி 80 கி.மீ. தூரத்தை தினமும் கடக்கத் துணிந்தார் ஜூலன். அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் டிரெய்னை பிடித்தால்தான் சரியான நேரத்துக்குப் பயிற்சிக்குச் செல்ல முடியும்.

jhulan goswami

ஆனால் தன்னுடைய பயிற்சியாளர் ஸ்வபன் சது, ஒரு ஸ்டிரிக்டான பயிற்சியாளராக இருந்ததால் சரியாக நேரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஜூலனுக்கு இருந்தது. பயிற்சிக்கு வர ஒரு நிமிடம் தாமதம் என்றாலும் கோஸ்வாமியை பயிற்சிக்கு அனுமதிக்க மாட்டாராம் ஸ்வபன். ஒரே ஒரு டிரெய்ன் அதுவும் அதிகாலையிலேயே பிடிக்கவேண்டும். அதை பிடித்தால் மட்டுமே கோஸ்வாமி சரியான நேரத்திற்கு செல்ல முடியும். ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும் அன்றைய பயிற்சி அவ்வளவுதான். ஒரு கடினமான பயணத்தில் பலமுறை டிரெய்னை விட்டாலும், முயற்சியை மட்டும் விடாமல் இருந்துள்ளார் கோஸ்வாமி. தன்னுடைய பயிற்சியாளரிடம் அனைத்து நுணுக்கங்களையும் விரைவாகவே கற்றுக்கொண்ட கோஸ்வாமி, ஸ்வபனின் விருப்பமான ஜூனியராக மாறினார். ஆனால் ஒரு நடுத்தர குடும்பத்தின் சிறுமிக்கு நடக்கும் அத்தனை தடங்கல்களும் ஜுலனுக்கும் நடந்தது. அவர் பயிற்சிக்கு செல்லாமல் படிப்பை மட்டும் தொடர முடிவெடுத்து பயிற்சி எடுப்பதை விட்டார்.

பெற்றோரால் பயிற்சியை விட்ட கோஸ்வாமி! வீட்டுக்கே சென்ற பயிற்சியாளர்!

உள்ளூரில் இருக்கும் மக்கள் மற்றும் உறவினர்கள், ”பொம்பள பிள்ளைக்குலாம் எதுக்கு விளையாட்டு” எனக்கூற. தன்னுடைய பெற்றோரும் அதிக அழுத்தம் போட பயிற்சியை நிறுத்திவிட்டு பள்ளிக்கு மட்டும் செல்ல ஆரம்பித்தார் ஜுலன்.

jhulan goswami Childhood

ஆனால் கோஸ்வாமியின் திறமையை உணர்ந்த பயிற்சியாளர் ஸ்வபன், அவருடைய வீட்டிற்கே நேராக சென்று கோஸ்வாமியை தொடர்ந்து பயிற்சிக்கு அனுப்பும் படி கேட்டு சம்மதம் வாங்கியுள்ளார். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு...

ஜுலன் கோஸ்வாமி குவித்த சாதனைகள்! தேடிவந்த மகுடங்கள்!

2002-ல் தொடங்கிய ஜுலனின் கிரிக்கெட் பயணம் இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு 2022-ல் முடிவுக்கு வந்தது. கடைசி போட்டியில் ஜூலன் இங்கிலாந்துக்கு எதிராக விளையாட, இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஜுலனுக்காக இங்கிலாந்து வீராங்கனைகள் வரிசையாக நின்று கைத்தட்டி மரியாதை வரவேற்றனர். இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஜுலனுக்காக ஒரு மரியாதை பதிவை பதிவிட்டிருந்தது. சாதனைகளை குவிப்பதை வழங்கமாக வைத்திருந்த ஜூலன் கோஸ்வானி, 355 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் பெண்கள் கிரிக்கெட்டராகவும், 250 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பெண்கள் கிரிக்கெட்டராகவும் தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடித்தார். அவர் படைத்த சாதனைகள் சில பின்வருவன..

jhulan goswami

* 355 விக்கெட்டுகள் - அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் ஜூலன் கோஸ்வாமி 355 விக்கெட்டுகளைப் பதிவு செய்துள்ளார். இது சர்வதேச பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகளாகும். 2018ஆம் ஆண்டில் 300 சர்வதேச விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீராங்கனையாக மாறி சாதனை படைத்தார் ஜூலன்.

* 200 விக்கெட்டுகள் - ஒருநாள் போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பெண் கிரிக்கெட் வீரர் கோஸ்வாமி. அவர் இந்த வடிவத்தில் 255 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இது இரண்டாவது இடத்தில் இஸ்மாயிலை விட (191) 64 விக்கெட்டுகள் அதிகம். அவரை தவிர ஒருவர் கூட 200 விக்கெட்டுகளை பதிவுசெய்யவில்லை.

jhulan goswami

* 43 உலகக்கோப்பை விக்கெட்டுகள் - மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் ஜூலன் கோஸ்வாமி 43 விக்கெட்டுகளை தட்டித்தூக்கியுள்ளார். இதுவே உலகக்கோப்பை வரலாற்றில் வீழ்த்தப்பட்ட அதிகபட்ச விக்கெட்டுகளாகும். இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் 43 விக்கெட்டுகளும் வெவ்வேறு பேட்டர்கள்.

* 3 அல்லது அதற்கும் குறைவான எகானமி- ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடி இருக்கும் மொத்த போட்டிகளிலும் 47.28% போட்டிகளில் 3 அல்லது அதற்கும் குறைவான எகானமி மட்டுமே வைத்துள்ளார் ஜூலன். முக்கியமாக 184 போட்டிகளில் 6-ல் மட்டுமே ஒரு ஓவருக்கு ஆறு ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளார்.

jhulan goswami

* டி20, ஒடிஐ, டெஸ்ட் மூன்று வடிவத்திலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பவுலர். டி20-ன் சிறந்த பந்துவீச்சு 11/5 விக்கெட்டுகள்.

* 3 ஆசிய பவுலர்கள் << கோஸ்வாமி : ஆசிய கண்டத்தின் வீரர்களில் ஜுலனைத் தவிர சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளுடன் இருப்பவர்கள் 3 பேர் மட்டுமே. ஷிகா பாண்டே (119), அஸ்மாவியா இக்பால் (114) மற்றும் அமிதா ஷர்மா (108) இவர்கள் 3 பேரின் விக்கெட்டுகளின் மொத்த (341) எண்ணிக்கையும், கோஸ்வாமியின் எண்ணிக்கையை விட 14 குறைவு.

jhulan goswami

ஐசிசியின் 2007-ம் ஆண்டுக்கான ''சிறந்த வீராங்கனை'' விருதைப் பெற்று சாதனை படைத்தார் ஜூலன். இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். மேலும் கிரிக்கெட் சாதனைகளுக்காக 2010-ல் அர்ஜுனா விருது மற்றும் 2012-ல் பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு ஜூலன் கோஸ்வாமியை கௌரவித்தது.