shreyas - ishan web
கிரிக்கெட்

”நான் எடுத்த கடுமையான நடவடிக்கையால் தான்..”! ஸ்ரேயாஸ், இஷான் ஒப்பந்த நீக்கம் குறித்து பேசிய ஜெய்ஷா!

Rishan Vengai

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிக்கான எதிர்காலத்தை ஆரோக்கியமாக மாற்றும் வகையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு பிசிசிஐ உடன் ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து இந்திய வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்தார்.

இந்த அறிவிப்பானது பிசிசிஐ உடன் மத்திய ஒப்பந்தத்தில் இருக்கும் அனைத்து வீரர்கள், உடற்தகுதியுடன் இருக்கும் வீரர்கள், ஓய்வில் இருக்கும் வீரர்கள் என அனைவரையும் கட்டாயம் உள்நாட்டு தொடர்களில் பங்கேற்க வலியுறுத்துகிறது. சமீபத்தில் உடற்தகுதியை நீருபிக்க இளம் வீரரான ’நிதிஷ் குமார் ரெட்டி’ துலீப் டிராபியில் இடம்பெற்றுள்ளார்.

ஸ்ரேயாஸ் - இஷான்

ஆனால் தொடக்கத்தில் பிசிசிஐ-ன் இந்த அறிவிப்பை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடைபிடிக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்த பிசிசிஐ, அவர்களுடனான மத்திய ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதுமட்டுமில்லாமல், “வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடாவிட்டால் விளைவு அதிகமாக இருக்கும்” என எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இஷான் கிஷன்

இந்நிலையில் பிசிசிஐ ஏற்படுத்தியிருக்கும் இந்த விதிமுறையால் தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இரண்டு மூத்தவீரர்களை தவிர அனைத்து வீரர்கள் துலீப் டிராபி, புச்சி பாபு டிராவி என உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ளனர்.

ஸ்ரேயாஸ், இஷான் நீக்கம் பற்றி பேசிய ஜெய்ஷா!

கடந்த 2023 உலகக்கோப்பை தொடரில் 530 ரன்கள் மற்றும் அரையிறுதியில் சதமடித்த ஸ்ரேயாஸ் ஐயர், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன் இருவரையும் ஒப்பந்த பட்டியலில் இருந்து வெளியேற்றியது பெரிய தண்டனை, வேண்டுமானால் கிரேடை குறைத்திருக்கலாம் என்ற கருத்தை பல்வேறு தரப்பினர் வைத்திருந்தனர்.

இதையும் படிக்க: ஒரே நாளில் 17 wickets; மிரட்டிய WI வீரர் ஷமர் ஜோசப்! 5 டெஸ்ட்களில் 3 முறை five-fer எடுத்து சாதனை!

இந்நிலையில் தற்போது ஸ்ரேயாஸ், இஷான் நீக்கம் பற்றி பேசியிருக்கும் ஜெய்ஷா, “நீங்கள் துலீப் டிராபி அணியைப் பார்த்தால், ரோகித் மற்றும் விராட் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் விளையாடப் போகிறார்கள். நான் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் தான், தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் துலீப் டிராபியில் விளையாடுகிறார்கள்.

ஆம் நாங்கள் கொஞ்சம் கண்டிப்பாகவே இருந்தோம். இவர்களுக்கு மட்டுமல்ல ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டபோது கூட, ​​நான்தான் அவரைக் கூப்பிட்டு உள்நாட்டு போட்டிகளில் சென்று விளையாடச் சொன்னேன். தற்போதும் நிச்சயமாக காயம்பட்டு வெளியே போனாலும் உடற்தகுதியை நிரூபித்துவிட்டு தான் இந்திய அணிக்கு வர முடியும். இது அனைத்து வீரர்களுக்கும் பொறுந்தும். உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவது அவசியமானது" என்று ஜெய் ஷா டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறியுள்ளார்.