ஜெய் ஷா x
கிரிக்கெட்

ICC-ன் புதிய தலைவராக போட்டியின்றி 'ஜெய்ஷா' தேர்வு.. இளம் வயதில் தலைவராக தேர்வாகி சாதனை!

Rishan Vengai

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தொடங்கியது.

icc

இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்றுமுறை பதவி வகிக்கலாம். கிரெக் பார்க்லே, தொடர்ந்து இரண்டு முறை ஐசிசி தலைவராக உள்ள நிலையில், மூன்றாவது முறை போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா, போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியது.

jai shah

இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக எந்தவிதமான போட்டியுமின்றி ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதில் ஐசிசி தலைவராக மாறி ஜெய் ஷா சாதனை!

குஜராத் கிரிக்கெட் அசோசியேசனில் தொடங்கிய ஜெய் ஷாவின் பயணம், தற்போது பிசிசிஐ செயலாளர் என்பதை கடந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்ற உயரத்திற்கு சென்றடைந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக் ஐசிசி அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், “பிசிசிஐயின் தற்போதைய கவுரவச் செயலாளரான ஜெய் ஷா, ஐசிசியின் சுதந்திரத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 1, 2024 அன்று ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்பார். ஆகஸ்ட் 20 அன்று, தற்போதைய ஐசிசி தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லே நவம்பரில் அவரது பதவிக்காலம் முடிவடையும் போது பதவி விலகுவார்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இளம் வயதில் ஐசிசி தலைவராகும் நபராக ஜெய் ஷா மாறியுள்ளார், தற்போது அவருக்கு 36 வயதாகிறது.