rohit - kohli - bumrah web
கிரிக்கெட்

”இந்த கேப்டன்தான் ஆரம்ப காலத்திலேயே நம்பிக்கை வைத்தார்..”! ரோகித், கோலி, தோனி குறித்து பேசிய பும்ரா!

Rishan Vengai

ஒரு பந்துவீச்சாளரால் எங்கிருந்து வேண்டுமானாலும் வெற்றியை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியவர் ஜஸ்பிரித் பும்ரா. இன்னும் 4 ஓவர்கள் தான் இருக்கு, அதுல 2 பும்ராவிற்கு இருக்கிறது என்றால் அந்த இரண்டு ஓவரை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என எதிரணி வீரர்கள் நினைக்குமளவு பும்ரா உலககிரிக்கெட்டில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

bumrah

ஜஸ்பிரித் பும்ரா ஒரு அரிய திறமை வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர், அவரை முறையாக பாதுகாத்து பராமரிக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, பும்ராவின் பணிச்சுமைகளை கவனமாக கையாண்டு வருகிறது. பும்ரா டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு தற்போது ஓய்வில் இருந்துவருகிறார்.

3 இந்திய கேப்டன்கள் குறித்து பேசிய பும்ரா..

சமீபத்தில் இந்திய அணியின் மூன்று சிறந்த கேப்டன்களான தோனி, கோலி, ரோகித் சர்மா மூன்று கேப்டன்கள் குறித்தும் தன்னுடைய கருத்தை பும்ரா பகிர்ந்து கொண்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பேசிய பும்ரா, தோனி குறித்து பேசுகையில் “எம்.எஸ் தோனி தான் நான் அணிக்குள் வந்த ஆரம்ப காலத்திலேயே எனக்கான பாதுகாப்பை விரைவாகக் கொடுத்தார். ஏனென்றால் அவர் ஒரு வீரர் மீதான தனது உள்ளுணர்வின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார், நிறைய திட்டமிடலில் அவருக்கு நம்பிக்கை இல்லை" என்று பேசினார்.

bumrah - dhoni

விராட் கோலி குறித்து பேசிய அவர், “விராட் கோலி அதிகப்படியான ஆற்றல் மிக்கவர், உணர்ச்சிவசப்படுபவர், இதயத்தை எப்போதும் இந்திய ஜெர்சியின் மீது வைத்துள்ளார். அவர் வீரர்களை ஃபிட்னஸ் விஷயத்தில் தள்ளி, கதையை அப்படியே மாற்றினார். இப்போது விராட் கேப்டனாக இல்லை, ஆனால் அவர் இன்னும் தலைவராகவே இருக்கிறார். கேப்டன்சி ஒரு பதவி, ஆனால் ஒரு அணி 11 வீரராலும் நடத்தப்படுகிறது" என்று பும்ரா கூறினார்.

bumrah - kohli

ரோகித் சர்மா குறித்து பேசிய அவர், “பேட்ஸ்மேனாக இருந்தாலும், பந்துவீச்சாளர்களிடம் அனுதாபம் கொண்ட சில கேப்டன்களில் ரோகி சர்மாவும் ஒருவர். எப்போதும் வீரர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு முக்கியத்துவம் கொடுப்பார், மேலும் ஒரு வீரர் என்ன செய்கிறார் என்பதை அவர் அறிவார். ரோஹித் கடினமானவர் அல்ல, எப்போதும் கருத்துபரிமாற்றங்களுக்கு தயராகாவே இருக்கிறார்" என்ற கூறியுள்ளார் பும்ரா.

bumrah - rohit

மூன்று இந்திய கேப்டன்களில் தோனி இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட்டை உச்சத்திற்கு எடுத்துச்சென்றார் என்றால், விராட் கோலி இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டை நம்பர் 1 இடத்திற்கு எடுத்துச்சென்றார், அதை அப்படியே பின்தொடரும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என மூன்று ஃபார்மேட்களிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது.