இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, காயம் காரணமாக சுமார் ஓராண்டு காலமாக இந்திய அணியில் இடம்பெறவில்லை. 2022 ஆசிய கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை, 2023 பார்டர்-கவாஸ்கர் டிராபி மற்றும் உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உள்ளிட்ட பல முக்கியமான போட்டிகளை அவர் தவறவிட்டார். இந்த போட்டிகளில் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
முதுகு வலி காயத்துக்காக அண்மையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் உடல்நலம் குணமாகி மீண்டு வருகிறார். தற்போது பெங்களூரில் உள்ள என்சிஏ எனப்படும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார். ஆனாலும் அவர் இன்னும் முழு உடற்தகுதியை அடையவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி அளித்த நேர்காணல் ஒன்றில் பும்ராவை குறித்து புகழ்ந்து பேசியிருக்கிறார். அதில் அவர், ''எந்த நேரத்திலும் ஒரு அணி தங்களின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரை தவறவிட்டால், அது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில் பும்ரா அணியில் இல்லாதது நன்றாகவே உணரப்படுகிறது என நினைக்கிறேன். அபாரமான, வித்தியாசமான பந்துவீச்சாளரான பும்ராவின் பந்துவீச்சு தாக்குதல் ஆடுகளத்தை அதிர வைக்கக்கூடியது.
உலகெங்கிலும் உள்ள பேட்ஸ்மேன்கள் வழியாக எனக்கு தெரிந்தவரை, பும்ரா ஸ்பீட் கன்-ஐ விட வேகமாக செயல்படக்கூடியவர். நாங்கள் அனைவரும் சிறந்த வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க விரும்புவதால், அவர் விரைவில் களத்திற்கு திரும்புவார் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அதை முடித்து வந்த பிறகு, அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது. முழு உடல்தகுதியை நிரூபிக்கும் பட்சத்தில் பும்ரா அயர்லாந்து தொடரில் விளையாட வைக்கப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது.