இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜூன் 14-ம் தேதியன்று தொடங்கிய டூர் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின, அதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 139 ரன்கள் மற்றும் 306 ரன்கள் அடித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது.
டூர் போட்டியில் சொதப்பினாலும் நம்பிக்கையுடன் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது இலங்கை அணி. மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 6 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளும், 92 ரன்னை எட்டுவதற்குள் 6 விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது.
ஆனால் அதற்குபிறகு கைக்கோர்த்த டி சில்வா மற்றும் மிலன் இருவரும் அபாரமாக விளையாடி அடுத்தடுத்து அரைசதமடித்து அசத்தினர். டி சில்வா 74 ரன்களும், மிலன் 72 ரன்களும் எடுத்து வெளியேற முதல் இன்னிங்ஸில் 236 ரன்களை எடுத்தது இலங்கை அணி.
இலங்கையை தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 67 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தபிறகு ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டுவர போராடினர். ஆனால் அவர்களும் 42, 56 ரன்களில் வெளியேற அடுத்துவந்த வீரர்கள் விரைவில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித், 8 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை எடுத்துவந்து அசத்தினார். ஜேமி ஸ்மித் 111 ரன்கள் அடித்து அசத்த, முதல் இன்னிங்ஸில் 358 ரன்களை பதிவுசெய்தது இங்கிலாந்து அணி.
இலங்கைக்கு எதிராக டெஸ்ட் சதமடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித், இங்கிலாந்து அணிக்காக இளம்வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தினார்.
இந்த சாதனையை 1930-ல் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 24 வயது 63 நாட்களில் சதமடித்து லெஸ் அமெஸ் வைத்திருந்தார். இந்த 94 வருட சாதனையை 24 வயது 42 நாட்களில் முறியடித்து அசத்தியுள்ளார் ஜேமி ஸ்மித்.
122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் இலங்கை அணி, 167 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது. மூத்தவீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 65 ரன்களுடன் விளையாடிவருகிறார்.