Indian Team @BCCI Twitter
கிரிக்கெட்

மீண்டும் துணை கேப்டனான ரஹானே - ருதுராஜ், ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் இடம்; புஜாரா, ஷமி இல்லை

ஜூலை மாதம் 27-ம் தேதி தொடங்கும் ஒருநாள் போட்டி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது.

சங்கீதா

இந்திய அணி அடுத்த மாதம் முதல் மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. வரும் ஜூலை மாதம் 12-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்குகிறது. இதனைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி 20-ம் தேதியும் தொடங்குகிறது. ஜூலை மாதம் 27-ம் தேதி தொடங்கும் ஒருநாள் போட்டி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது.

ICC Test Championship

ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான (June 16, 2023 to June 2025) புள்ளிகள், இந்த டெஸ்ட் தொடரின் வாயிலாக கணக்கிடப்படுவதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, இந்திய அணி டெஸ்ட் தொடர் : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), இஷன் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி என மொத்தம் 16 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரஹானே மீண்டும் இந்திய அணியின் டெஸ்ட் வடிவத்திற்கு துணைக் கேப்டன் ஆக்கப்பட்டுள்ளார். புஜாராவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நவ்தீப் சைனி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஓய்வில் உள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ராவும் இடம் பெறவில்லை. ஐபிஎல் போட்டியில் கவனம் ஈர்த்த ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் ஆகியோர் முதன்முறையாக இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், இந்திய அணி ஒருநாள் தொடர் : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷன் கிஷான் , ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட்டில் மட்டுமே தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரில் தமிழக வீரர்கள் யாருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.