உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட இஷான் கிஷன், கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட 2023-2024 ஆண்டுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். அவருடன் சேர்ந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்ட நிலையில், இஷான் கிஷானை மட்டும் இன்னும் பிசிசிஐ சோதனைக்குள்ளாகவே வைத்துவருகிறது.
இந்நிலையில் புச்சி பாபு டிரோபி, துலீப் டிரோபி முதலிய உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடிவரும் இஷான் கிஷான், அடுத்தடுத்து அதிரடியான சதங்களை பதிவுசெய்து இந்த ஆட்டம் போதுமா என பிசிசிஐ தரப்புக்கு கேள்வி எழுப்பிவருகிறார்.
அந்தவகையில் துலீப் டிராபியை முக்கியத்துவம் வாய்ந்த தொடராக பிசிசிஐ கவனித்து வரும் நிலையில், இந்தியா சி அணி சார்பில் பங்கேற்ற இஷான் கிஷன் விளையாடிய முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார்.
துலீப் டிரோபியின் இரண்டாம் சுற்று போட்டியில் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் இந்தியா சி அணி பேட்டிங் செய்தது. விளையாடிய அனைத்து வீரர்களும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். டாப் ஆர்டர் வீரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் 43 ரன்கள் மற்றும் ரஜத் பட்டிதார் 40 ரன்களும் அடித்து வெளியேற, அடுத்து களத்திற்கு வந்த இஷான் கிஷன் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
14 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த இஷான் கிஷான், துலீப் டிராபியில் பங்கேற்ற முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். முகேஷ் குமார் ஓவரில் 111 ரன்னில் இஷான் கிஷன் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பாபா இந்திரஜித் 72 ரன்கள் அடிக்க, முதல்நாள் முடிவில் இந்தியா சி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் அடித்துள்ளது.
புச்சிபாபு டிரோபியின் முதல்போட்டியில் சதமடித்த இஷான் கிஷான், தற்போது துலீப் டிராபியின் முதல் போட்டியிலும் சதமடித்து அசத்தியுள்ளார். இந்திய அணி இன்னும் எவ்வளவு நாட்கள் தான் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்காமல் இருக்கப்போகிறது என்று தெரியவில்லை, இஷான் கிஷன் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.