இஷான் கிஷன் web
கிரிக்கெட்

BCCI-க்கு தலைவலி கொடுத்த இஷான் கிஷன்! 10 சிக்சர்களுடன் 86 பந்தில் சதம்! IND அணியில் இடம் கிடைக்குமா?

Rishan Vengai

திருநெல்வேலியில் இன்று நடைபெற்றுவரும் புச்சி பாபு டிராபி போட்டியில் ஜார்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேச அணிகள் தொடக்கச் சுற்றில் மோதின. அதில் ஜார்கண்ட் அணிக்காக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷன் 86 பந்துகளில் சதம் விளாசினார்.

உள்நாட்டு தொடரில் விளையாடாததால் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இஷான் கிஷன், இந்த சதம் போதுமா என்று உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் மூன்று இலக்க ரன்களை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் நீக்கப்பட்ட இஷான் கிஷன்!

2023-2024 ஆண்டுக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தை கடந்த பிப்ரவரி மாதம் பிசிசிஐ வெளியிட்டது. அதில் கடந்தாண்டு B மற்றும் C பிரிவுகளில் இணைக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் நடப்பாண்டு ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

ishan kishan

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டதை குறிப்பிட்டு காட்டியிருந்த பிசிசிஐ, தேசிய அணிகளில் பங்கேற்று விளையாட முடியாத போது வீரர்கள் நிச்சயம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற பரிந்துரையையும் சுட்டிக்காட்டியது. இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ரஞ்சிப்போட்டிகளை புறக்கணித்த நிலையில், பிசிசிஐ இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

ஸ்ரேயாஸ் - இஷான்

ஆனால் ரஞ்சிக்கோப்பையின் கடைசிகட்ட போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்று விளையாடியதால் மீண்டும் இந்திய அணியில் இணைக்கப்பட்டார். ஆனால் இஷான் கிஷன் ரஞ்சிக்கோப்பையை புறக்கணித்துவிட்டு ஐபிஎல் தொடரில் மட்டும் பங்கேற்றதால் இன்னும் அவரை இந்திய அணிக்குள் பிசிசிஐ கொண்டுவராமல் இருந்துவருகிறது. இஷான் கிஷன் ஒருநாள் போட்டியில் இரட்டைசதமடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதுவும் சிறந்ததாக இல்லை.. வேதனைப்பட்ட இஷான்!

பிசிசிஐ ஒப்பந்தப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து வேதனையுடன் பேசிய இஷான் கிஷன், என் குடும்பத்தினரை தவிர யாரும் என்னை புரிந்துகொள்ளவில்லை, எனக்கு எதுவும் சிறந்ததாக அமையவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியின் போது பேசிய இஷான், ​"நான் ரன்களை அடித்தேன், பின்னர் பெஞ்சில் அமரவைக்கப்பட்டேன். இவை ஒரு குழு விளையாட்டில் நடக்ககூடியவை தான். இருப்பினும், நான் அடுத்தடுத்த பயணங்களால் சோர்வை அனுபவித்தேன். ஏதோ தவறாக இருப்பதாக தோன்றியதால், எனது உடல்நிலைக்காக நான் ஓய்வெடுக்க முடிவு செய்தேன்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, என் குடும்பம் மற்றும் சில நண்பர்களை தவிர யாரும் என்னை புரிந்துகொள்ளவில்லை, அதற்கு பிறகு நடந்தது அனைத்தும் கடினமாக இருந்தது, எனக்கு எதுவும் எளிதானதாக இல்லை” என்று வேதனையுடன் பேசினார்.

இஷான் கிஷனை நீக்கியிருந்தாலும் பிசிசிஐ தரப்பு அவர் மீது நம்பிக்கையுடன் இருக்கிறது, சமீபத்தில் கூட இஷான் கிஷன் புச்சி பாபு தொடரில் பங்கேற்றது சிறந்த விசயம் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

Ishan Kishan

நடந்து வரும் புச்சி பாபு டிராபியின் ஜார்கண்ட் மற்றும் மத்தியப் பிரதேச அணிகள் மோதிய போட்டியில் முதலில் ஆடிய மத்திய பிரதேச அணி 225 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. பின்னர் ஆடிய ஜார்கண்ட் அணியில் மற்றவீரர்கள் சொதப்பினாலும், தனியொரு ஆளாக களத்தில் நின்ற இஷான் கிஷன் 86 பந்துகளில் சதமடித்து, பின்னர் 5 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 114 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜார்கண்ட் அணி 7 விக்கெட்டுகளுக்கு 277 ரன்களுடன் விளையாடிவருகிறது.