ashwin  ICC
கிரிக்கெட்

அதே அகமதாபாத் மைதானம்.. அதே ஆஸி. அணி; 2011 காலிறுதியில் ஜொலித்த அஸ்வின்! பைனலில் இடம்பெறாதது சரியா?

ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இருந்தும் ஆல்ரவுண்டர் ஆப்சனை கிளிக் செய்யாத இந்திய அணி இறுதிப்போட்டியில் கோட்டைவிட்டு சோகமாக வெளியேறியது.

Rishan Vengai

ரவிச்சந்திரன் அஸ்வினும் இந்திய அணியின் இறுதிப்போட்டியும் என எடுத்துக்கொண்டால், அஸ்வினை பயன்படுத்திக்கொள்ளாத இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை இரண்டையும் பறிகொடுத்து 2 ஐசிசி கோப்பைகளை தவறவிட்டுள்ளது.

2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அஸ்வினை ஏன் அமரவைத்தார்கள் என்ற கேள்விக்கே விடை தெரியாத நிலையில், தற்போது 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் அஸ்வினை அமரவைத்து சோதனைக்குள் தள்ளியுள்ளது இந்திய அணி. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 163 ரன்கள் அடித்த அதே இடது கை டிராவிஸ் ஹெட் தான், தற்போதும் சதமடித்து இந்திய அணியிடம் இருந்து 2 உலகக்கோப்பைகளை தட்டிப்பறித்துள்ளார். இடது கை வீரருக்கு எதிராக சிறந்த விக்கெட் ஸ்டிரைக் ரேட் வைத்திருக்கும் வீரரும், அதிகம் அனுபவம் வாய்ந்த வீரருமான அஸ்வினை பயன்படுத்தாமல் கேப்டன் ரோகித் சர்மா கோட்டைவிட்டுள்ளார்.

2011-ல் சதமடித்த ரிக்கி பாண்டிங்கை வெளியேற்றிய அஸ்வின்!

நடந்து முடிந்த 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை பொறுத்தவரையில், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆல்ரவுண்டர்களை வைத்திருந்த ஆஸ்திரேலிய அணி 7 பவுலர்களை பயன்படுத்தி வெற்றி கண்டது. ஆனால் ஆல்ரவுண்டர்கள் பற்றாக்குறையால் இந்திய அணி 5 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தி இக்கட்டான நிலைக்கு சென்றது. ஒரேஒரு இடது கை பேட்டரை வெளியேற்ற முடியாத இந்திய அணி இறுதிப்போட்டியை எந்தவிதமான அழுத்தம் தராமலும் கோட்டைவிட்டது. ஆல்ரவுண்டரும் மூத்த சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்படாதது பெரிய அடியாக இந்திய அணிக்கு விழுந்தது.

2011 ind vs aus

2011 உலகக்கோப்பையின் காலிறுதிப்போட்டியில் இதே அகமதாபாத் நரேந்திர மைதானத்தில் இந்திய அணி பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. அப்போது முதல் 10 ஓவர் வரை விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு, ஷேன் வாட்சனை 25 ரன்னில் போல்டாக்கி வெளியேற்றிய அஸ்வின் புதிய பந்திலேயே முதல் விக்கெட்டை எடுத்துவந்தார். பின்னர் சதமடித்து கடைசிவரை நிலைத்து நின்ற கேப்டன் ரிக்கி பாண்டிங்கை 104 ரன்னில் வெளியேற்றி அசத்தினார். 10 ஓவரில் 52 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.

ashwin

இந்நிலையில் தான் அஸ்வினை நரேந்திர மோடி மைதானத்தில் விளையாட வைக்காமல் கோட்டைவிட்டுள்ளது இந்திய அணி. கடைசியாக உலகக்கோப்பை அணிக்குள் வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே விளையாடினார். அந்தப்போட்டியில் 10 ஓவரில் ஒரு ஓவரை மெய்டனாக வீசி மிடில் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட ரவி அஸ்வின், 34 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். அந்த போட்டியில் ஒருவேளை ஹெட் இருந்திருந்தால், அஸ்வினின் முதல் விக்கெட் ஹெட் உடைய விக்கெட்டாக கூட இருந்திருக்கும். எப்படியிருப்பினும் ஹர்திக் பாண்டியா இல்லாத இடத்தில் நிச்சயம் இந்திய அணி மாற்று ஆல்ரவுண்டரோடு மட்டுமே சென்றிருக்க வேண்டும்!