iml league web
கிரிக்கெட்

மீண்டும் களத்தில் சச்சின், லாரா, ஜாக் காலீஸ்.. ஆரம்பமாகும் இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக்! முழு விவரம்!

Rishan Vengai

இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் முதலிய ஆறு புகழ்பெற்ற கிரிக்கெட் நாடுகளின் சாம்பியன் வீரர்களை ஒன்றிணைத்து நடத்தப்படவிருக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) தொடரானது வரும் நவம்பர் மாதம் கிரிக்கெட் உலகை தாக்கவுள்ளது.

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஜாக் காலீஸ், குமார் சங்ககரா, இயன் மோர்கன், ஷேன் வாட்சன் முதலிய முன்னாள் வீரர்கள் மோதவிருக்கும் பரபரப்பான ஐஎம்எல் டி20 தொடரானது நவம்பர் 17, 2024 முதல் டிசம்பர் 8, 2024 வரை நடைபெறவிருக்கிறது.

பரபரப்பான தொடராக நடக்கவிருக்கும் IML..

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) தொடரின் முதல் 4 போட்டிகளானது, நாவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நவம்பர் 17ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை இடையேயான முதல் போட்டியாக தொடங்குகிறது. இந்திய அணியை வழிநடத்தும் சச்சின் டெண்டுல்கர், இலங்கையை வழிநடத்தும் குமார் சங்கக்காரவுடன் மோதுகிறார்.

இரண்டாவது போட்டியில், ஷேன் வாட்சனின் ஆஸ்திரேலியா, ஜாக் காலீஸின் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது, அதைத் தொடர்ந்து இலங்கை மற்றும் இயன் மோர்கனின் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பின்னர் பிரையன் லாரா மற்றும் அவரது மேற்கிந்திய தீவுகள் அணி ஷேன் வாட்சனின் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இது ஒரு பரபரப்பான ஆரம்பமாக இருக்கப்போகிறது.

நான்கு நாட்கள் கழித்து போட்டிகள் நவம்பர் 21ஆம் தேதி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் (BRSABV) ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நகர்கின்றன. அங்கு இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த லக்னோ மைதானத்தில் மொத்தம் 6 போட்டிகள் நடக்கவிருக்கிறது.

அதன் பிறகு லீக் ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் மாற்றப்படும் போட்டிகள், இறுதிப்போட்டிவரை அங்கேயே நடத்தப்படவிருக்கின்றன. அங்கு நவம்பர் 28 அன்று இந்தியா இங்கிலாந்துடன் மோதும். ராய்ப்பூர் ஸ்டேடியத்தில் அரையிறுதி மற்றும் டிசம்பர் 8 ஆம் தேதியன்று இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 8 ஆட்டங்களை நடத்தவிருக்கின்றது. ராய்ப்பூரில் சர்வதேச கிரிக்கெட் லீக் முதல் பதிப்பின் சாம்பியன்கள் மகுடம் சூடுவார்கள். சச்சின் டெண்டுல்கரை மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு அழைத்துவந்த பெருமையை ஐஎம்எல் பெற்றுள்ளது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் கேப்டன்கள்..

1. இந்தியா: சச்சின் டெண்டுல்கர்

2. வெஸ்ட் இண்டீஸ்: பிரையன் லாரா

3. இலங்கை: குமார் சங்கக்கரா

4. ஆஸ்திரேலியா: ஷேன் வாட்சன்

5. இங்கிலாந்து: இயோன் மோர்கன்

6. தென்னாப்பிரிக்கா: ஜாக் காலீஸ்