virat, rahul pt web
கிரிக்கெட்

சிங்கிள் எடுக்க மறுத்தது யார்? களத்தில் நடந்தது என்ன? - உண்மையை உடைத்து சொன்ன கே.எல்.ராகுல்

உலகக் கோப்பைத் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Angeshwar G

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று மகாராஷ்ட்ர மாநிலம் புனே நகரில் நடைபெற்ற போட்டியில் 257 ரன்களை இலக்காகக் கொண்டு களம் கண்ட இந்திய அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 261 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 97 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் அடக்கம். சுப்மன் கில் 53 ரன்களையும், ரோகித் சர்மா 48 ரன்களையும் எடுத்தனர்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் அடித்தனர். இந்திய அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

38 ஆவது ஓவரின் முடிவில் கே.எல்.ராகுல் 33 பந்துகள் ஆடி 33 ரன்களை எடுத்திருந்தார். விராட் 77 பந்துகளை ஆடி 73 ரன்களை எடுத்திருந்தார். அணியின் ஸ்கோர் 229 ரன்களாக இருந்தது. வெற்றி பெற வெற்றி பெற 27 ரன்கள் மட்டுமே தேவையானதாக இருந்தது. அதேபோல் விராட் சதமடிக்கவும் 27 ரன்கள் தேவையானதாக இருந்தது. இந்த சூழலில் விராட் சதமடிக்க ராகுல் உதவினார். விராட் சதமடிக்கும் போது 97 பந்துகள் ஆடி 103 ரன்களை எடுத்திருந்தார். ராகுல் கூடுதலாக ஒரு பந்துமட்டும் விளையாடி 34 பந்துகளில் 34 ரன்களை எடுத்திருந்தார்.

இந்த சூழலில் போட்டியின் போது விராட் கோலிக்கும் ராகுலுக்கும் இடையில் நடந்த உரையாடடலை கே.எல்.ராகுல் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “நான் தான் சிங்கிள் வேண்டாம் என மறுத்தேன். ’சிங்கள் எடுக்கவில்லை என்றால் மோசமானதாக பார்ப்பார்கள். என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக விளையாடுவதாக மக்கள் நினைப்பார்கள்’ என்று விராட் கூறினார். ஆனால், ’நாம் எவ்வித சிரமமும் இல்லாமல் வெற்றி பெறலாம், நீங்கள் சதத்தை நிறைவு செய்யுங்கள்’ என்று நான் சொன்னேன்.” என தெரிவித்துள்ளார்.

இந்த சதத்தின் மூலம் விராட் கோலி தனது 48 ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார்.