IndW vs BanW Twitter
கிரிக்கெட்

கடைசி 4 பந்துக்கு 1 ரன் தேவை! வெற்றிபெற வேண்டிய இடத்தில் இருந்து கோட்டைவிட்ட இந்திய மகளிர் அணி!

இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்துள்ள நிலையில், ஒருநாள் தொடரும் சமனில் முடிந்துள்ளது.

Rishan Vengai

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்குபெற்று விளையாடி வந்தது. டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வெற்றிபெற்றிருந்தாலும், ஒருநாள் போட்டியில் சிறப்பான எதிர்ப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் வங்கதேச அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது.

டி20 தொடரை வென்றாலும் மோசமான தோல்விகளால் எழுந்த சர்ச்சை!

முதலில் நடத்தப்பட்ட டி20 தொடரில் 2-1 என்று இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றிருந்தாலும், கடைசி 2 டி20 போட்டிகளில் விளையாடிய விதம் பல விமர்சனங்களை எதிர்கொண்டது. முதல் டி20 போட்டியில் சிறப்பாக விளையாடி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும், இரண்டாவது போட்டியில் வெறும் 95 ரன்களை மட்டுமே அடித்தது இந்திய அணி. இருப்பினும் ஷஃபாலி மற்றும் தீப்தி ஷர்மாவின் சிறந்த பந்துவீச்சால் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஒருவழியாக வெற்றிபெற்றது இந்தியா. ஆனால் மூன்றாவது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வங்கதேசம் வீழ்த்தியது. டி20 தொடரில் அடைந்த கடைசி போட்டியின் தோல்வி தொடருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்ததால் எந்தவிதமான சர்ச்சைகளும் எழாமல் இருந்தது. ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி செயல்பட்ட விதம், இந்திய தேர்வுக்குழுவையே கேள்வி எழுப்பச்செய்தது.

IndW vs BanW

முதல் ஒருநாள் போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இந்திய பவுலர்கள் அமஞ்சோத் கௌர் மற்றும் தேவிகா வைத்யா இருவரும் வங்கதேச அணியை 152 ரன்களில் சுருட்டினர். ஒருநாள் கிரிக்கெட்டில் 153 ரன்களை இந்திய அணி சுலபமாக வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், வங்கதேசத்தின் தரமான பந்துவீச்சுக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் தவித்த இந்திய வீராங்கனைகள் அனைவரும் கோட்டைவிட்டனர்.

அதிக பட்ச ரன்களாக 20 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை கண்டது இந்திய மகளிர் அணி. இந்திய அணியின் இந்த தோல்வியானது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. விரைவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், கடந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் யாரும் எடுக்கப்படாதது சர்ச்சையானது.

தொடர் யாருக்கு என்ற போட்டியில் 4 பந்துக்கு 1 ரன் அடிக்காத இந்திய அணி!

முதல் ஒருநாள் போட்டிக்கு பின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளான நிலையில் , இரண்டாவது போட்டியில் வெகுண்டெழுந்த இந்திய அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் இருவரின் அபாரமான ஆட்டத்தால் 108 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவுசெய்து வங்கதேசத்திற்கு பதிலடி கொடுத்தது. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.

IndW vs BanW

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. 226 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி விரைவாகவே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஹர்லீன் தியோல் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி அடுத்தடுத்து அரைசதங்களை பதிவு செய்து அசத்தியது. 59 ரன்களில் ஸ்மிரிதி வெளியேற மீண்டும் ஒரு முக்கியமான கட்டத்தில் கோட்டைவிட்டு வெளியேறினார் கேப்டன் கார். பின்னர் தீயோல் மற்றும் ஜெமிமா இருவரும் சேர்ந்து இந்தியாவை வெற்றிக்கு நோக்கி அழைத்துச்சென்றாலும், போட்டியையே தலைகீழாக திருப்பும் விதமாக தீயோல் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

9 பவுண்டரிகளுடன் 77 ரன்களில் தீயோல் வெளியேற ஆட்டம் சூடுபிடித்தது. அதற்கு பிறகு இந்திய அணியை எழவே விடாமல் அடித்த வங்கதேச அணி, பவுலிங்கில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தியது. அடுத்த 25 ரன்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற இந்தியா 217 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இன்னும் வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் கடந்த போட்டியின் நாயகி ஜெமிமா இருந்தது இந்திய அணியின் நம்பிக்கையை இழக்காமல் இருக்கச்செய்தது. அதற்கேற்றார் போல் கடைசி விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஜெமிமா மற்றும் மேக்னா சிங் இருவரும் தட்டி தட்டி ரன்களை சேர்த்தனர்.

3 ரன்கள் தேவை என்ற இடத்தில் சொதப்பிய ஜெமிமா!

கடைசி ஓவருக்கு இந்திய அணி வெற்றிபெற 3 ரன்கள் மட்டுமே தேவை இருந்தது. அப்போது பந்தை எதிர்கொண்ட மேக்னா சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை ஜெமிமாவிடம் ஒப்படைத்தார். ஜெமிமா வெற்றிக்கான இரண்டு ரன்களை அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைப்பார் என்று எதிர்ப்பார்த்த போது, அவரும் 1 ரன்னிற்கு சென்ற போட்டியை பார்த்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளக்கியது.

IndW vs BanW

ஜெமிமாவும் ஒரு ரன்னை எடுக்க போட்டி சமன் செய்யப்பட்டது. எந்த நம்பிக்கையில் அவர் சிங்கிள் எடுத்தாரோ தெரியவில்லை, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட வங்கதேச பவுலர் மருஃபா அக்தெர், மேக்னாவை வெளியேற்றி போட்டியை சமனில் முடித்துவைத்தார். எளிதாக வென்று விடும் என்ற இடத்திலிருந்து இந்திய அணி போட்டியை கோட்டை விட்டிருப்பது, மீண்டும் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாத இந்திய ரசிகர்கள் இந்திய அணி நிர்வாகத்தையும், டெய்ல் எண்டர்களோடு எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை ஜெமிமா கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர். கடைசி ஓவரை போட்ட மருஃபா அக்தெர் தான் முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

அதுபோல சூப்பர் ஓவர் இல்லாததும், டிஆர்எஸ் இல்லாததையும் விமர்சித்து வருகின்றனர்.