ஸ்மிரிதி மந்தனா x
கிரிக்கெட்

சச்சின், கோலிக்கு பிறகு SENA நாடுகளில் சதமடித்த ஒரே IND வீரர்.. பிரம்மிக்க வைக்கும் ஸ்மிரிதி மந்தனா!

இந்திய கிரிக்கெட் பல ஆளுமைகளை தன்னுடைய மகுடத்தில் அலங்கரித்துள்ளது, அதில் ஸ்மிரிதி மந்தனா எனும் இடதுகை வீரரை போல யாரையும் இதுவரை கண்டிராதஅளவு பல அசாத்திய சம்பவங்களை உலககிரிக்கெட்டில் முத்திரை பதித்துள்ளார் “Princess Of Indian Cricket" எனும் ஸ்மிரிதி!

Rishan Vengai

இந்தியாவில் பண்டிகைகள், கலாசார கொண்டாட்டங்களுக்கு நிகராக கொண்டாடப்படும் ஒரு நிகழ்வு என்றால் அது கிரிக்கெட் மட்டும்தான். அதற்கு எடுத்துக்காட்டாய் சமீபத்தில் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய வீரர்களை வரவேற்க, மும்பையில் கடலை போல திரண்ட மக்களை பார்த்தால் தெரிந்திருக்கும்.

இந்திய மக்களின் உணர்வோடு ஒன்றிய கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்கும் வீரர்களை ரசிகர்கள் தங்களுடைய ஹீரோவாகவே கொண்டாடுவது வழக்கம். ஆனால் துரதிருஷ்டவசமாக கிரிக்கெட்டில் சாதனைகள் புரிந்த ஆண் வீரர்களுக்கு கிடைக்கும் அதே வரவேற்பும் உற்சாகமும் பெண் கிரிக்கெட்டர்களுக்கும் கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.

Smriti Mandhana

எப்படியிருப்பினும், இந்திய நாட்டிற்காக தங்களையே அர்ப்பணித்த பெண் கிரிக்கெட் வீரர்கள் “சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா” போன்று சமமான திறமைகளால் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். தங்களுடைய தீவிர முயற்சிகளால் தற்போதும் தமது நாட்டின் கௌரவத்திற்காக எவ்வளவு கூடுதல் மைல்தூரம் ஓடவேண்டுமானாலும் அதற்கு தயாராகவே இருந்து வருகின்றனர் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனைகள்.

Smriti Mandhana

அந்தவகையில் 1792-ம் முதல் உருவாக்கப்பட்டு உலகின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடிவரும் இந்திய கிரிக்கெட்டில் ”முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனையாக” சில அசாத்தியமான சாதனைகளை படைத்து பிரம்மிக்க வைத்துள்ளார் ஸ்மிரிதி மந்தனா.

SENA நாடுகளில் சதமடித்த ஒரே இந்திய வீராங்கனை!

இந்திய மண்ணில் செழித்து விளங்கும் இந்திய கிரிக்கெட்டானது ஏனோ எப்போதும் ’தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா’ முதலிய வெளிநாடுகளுக்கு சென்றால் புஸ்வானம் ஆகிவிடும். விடியற்காலையில் போட்டியை பார்க்கலாம் என டிவியை ஆன்செய்யும் அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சும். இந்திய மண்ணில் ஜாம்பவான்களாக திகழும் வீரர்களால் கூட வெளிநாட்டு மண்ணில் ரன்களை சேர்ப்பது கடினமான விஷயமாக இருந்து வந்துள்ளது.

Sachin

அதனை முதலில் உடைத்தவர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே, அதனை தொடர்ந்து விராட் கோலி அந்த பொறுப்பை தனதாக்கி கொண்டார். தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்கி மிளிர்ந்த ஷிகர் தவான் ஒருநாள் போட்டிகளில் SENA நாடுகளில் சதமடித்து அசத்தியுள்ளார். இந்த 3 சாம்பியன் வீரர்களுக்கு பிறகு SENA நாடுகளில் ஒருநாள் சதமடித்த ஒரே இந்திய வீராங்கனையாக ஸ்மிரிதி மந்தனா பெண்கள் கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Smriti Mandhana

SENA நாடுகளில் ODI சதமடித்த இந்திய வீரர்கள்!

ஆண் கிரிக்கெட்:

* சச்சின் டெண்டுல்கர்

* விராட் கோலி

* ஷிகர் தவான்

பெண் கிரிக்கெட்:

* ஸ்மிரிதி மந்தனா - ஆஸ்திரேலியா (2016), இங்கிலாந்து (2017), தென்னாப்பிரிக்கா (2018), நியூசிலாந்து (2019)

ரோகித் சர்மா, சூர்யாவிற்கு பிறகு ஒரே இந்திய வீராங்கனை!

ஒருபக்கம் ஒருநாள் போட்டிகளில் SENA நாடுகளில் சம்பவம் செய்த ஸ்மிரிதி மந்தனா, குறுகிய வடிவமான டி20 கிரிக்கெட்டிலும் சம்பவம் செய்துள்ளார்.

Smriti Mandhana

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 24 அரைசதங்களை அடித்திருக்கும் ஸ்மிரிதி மந்தனா, SENA நாடுகளான ’தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா’ முதலிய நான்கு வெளிநாடுகளிலும் சர்வதேச டி20 அரைசதமடித்த ஒரே இந்திய வீராங்கனையாக ஜொலிக்கிறார்.

ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவிற்கு பிறகு இந்த சாதனையை படைக்கும் மூன்றாவது இந்திய வீரர் ஸ்மிரிதி மந்தனா.

Smriti Mandhana

ஆண் கிரிக்கெட்:

* ரோகித் சர்மா

* சூர்யகுமார் யாதவ்

பெண் கிரிக்கெட்:

* ஸ்மிரிதி மந்தனா

ஆஸ்திரேலியா மண்ணில் ODI & Test சதம்!

தன்னுடைய முதல் ஒருநாள் சதத்தையே ஆஸ்திரேலியா மண்ணில் 19 வயதில் அடித்த ஸ்மிரிதி மந்தனா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து, ஆஸ்திரேலியா மண்ணில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் சதமடித்த ஒரே இந்திய வீராங்கனையாக மிளிர்கிறார்.

century vs australia

அதுமட்டுமில்லாமல் பிங்க் பால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனையாகவும் ஸ்மிரிதி மந்தனா சாதனை படைத்து அசத்தியுள்ளார்.