இந்திய கிரிக்கெட் அணியில் ODI மற்றும் T20I இரண்டிலும் மிகப்பெரிய ஆளுமையாக தன்னை நிலைநிறுத்தியிருக்கும் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்துக்கு எதிராக அதிவேகமாக டி20 சதமடித்த (23 பந்துகளில்) ஒரே இந்திய வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நியூசிலாந்துக்கு எதிராக 24 பந்துகளில் அரைசதம், இங்கிலாந்துக்கு எதிராக 25 பந்துகளில் அரைசதம் என இந்தியாவிற்காக அதிகமுறை அதிவேக சர்வதேச டி20 அரைசதமடித்த ஒரே வீராங்கனையாக நீடிக்கிறார்.
சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணிக்காக 18 பந்துகளில் அரைசதமடித்து வரலாறு படைத்த ஸ்மிரிதி மந்தனா, ஒட்டுமொத்த பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேக டி20 அரைசதமடித்த வீராங்கனையாக மாறி சாதனை படைத்தார்.
இந்த சாதனையை நியூசிலாந்து வீரர் சோபி டெவைன் உடன் பகிர்ந்துள்ளார் ஸ்மிரிதி மந்தனா.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 அரைசதங்கள் அடித்த ஒரே இந்திய வீராங்கனையாக சாதனை படைத்துள்ளார்.
நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய மண்ணில் ஒருநாள் சதத்தை பதிவுசெய்த ஸ்மிரிதி மந்தனா, இந்திய அணிக்காக அதிக ODI சதங்கள் அடித்த வீராங்கனையாக சாதனை படைத்தார்.
7 ஒருநாள் சதங்களை அடித்திருக்கும் ஸ்மிரிதி மந்தனா அந்த சாதனையை நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் உடன் சமன் செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் அரைசதமடித்து அசத்திய ஸ்மிரிதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் (24) அடித்த 3வது உலக வீராங்கனையாக சாதனை படைத்தார்.
முதல் இரண்டு இடங்களில் நியூசிலாந்து வீராங்கனை சூசி பேட்ஸ் (29), ஆஸ்திரேலியா வீராங்கனை பேத் மூனி (25) ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களை அடித்திருக்கும் ஸ்மிரிதி மந்தனா, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் சதமடித்த ஒரே இந்திய வீரங்கனை என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்துவருகிறார்.
யு19 ஒருநாள் போட்டியில் இரட்டைசதமடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களை அடித்த 2வது இந்திய வீராங்கனையாக ஹர்மன்ப்ரீத் கவுர் உடன் இணைந்துள்ளார்.
ஐசிசியின் ‘வருடத்திற்கான சிறந்த பெண் கிரிக்கெட்டருக்கான விருதை’ 2018, 2021 என இரண்டு ஆண்டுகளில் வென்ற ஒரே இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மட்டுமே.
ஒரே ஒருமுறை ஜுலன் கோஸ்வாமி பெற்றுள்ளார்.
ஐசிசி-ன் சிறந்த பெண் ODI கிரிக்கெட்டர் விருது (2018) வாங்கிய ஒரே இந்திய வீராங்கனையாக ஸ்மிரிதி மந்தனா சாதனை படைத்துள்ளார். அவரை தவிர வேறு எந்த இந்திய வீராங்கனைகளும் இந்த விருதை பெற்றதில்லை.
ஐபிஎல் தொடரில் 17 வருடங்களாக கோப்பை வெல்லாமல் இருந்து வரும் ஆர்சிபி அணியை, ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் விட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன் மற்றும் ஃபேஃப் டூபிளெசிஸ் முதலிய 7 கேப்டன்கள் வழிநடத்தியுள்ளனர். இப்படி பல உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் கேப்டனாக இருந்தபோதும், ஆர்சிபி அணியால் கோப்பை வெல்லமுடியவில்லை.
இதனால் கோப்பையே வெல்லாத ஒரு சோக்கர் அணி என விமர்சிக்கப்பட்ட ஆர்சிபி அணியை 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் கோப்பைக்கு அழைத்துச்சென்ற ஸ்மிரிதி மந்தனா, ஆர்சிபி அணிக்காக கோப்பை வென்ற முதல் மற்றும் ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.
இந்திய அரசு 2018-ம் ஆண்டு ஸ்மிரிதி மந்தனாவிற்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்துள்ளது.