india team x page
கிரிக்கெட்

IND Vs SA | ஒரே ஆண்டு.. ஒரே போட்டி.. இந்திய அணி படைத்த மகத்தான 10 சாதனைகள்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று, ஒரேபோட்டியில் இந்திய அணி பல சாதனைகளைப் படைத்துள்ளது. அவை என்ன என்பதுகு குறித்து இங்கு பார்ப்போம்.

Prakash J

தென்னாப்ரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், நேற்று நடைபெற்ற போட்டியில், 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. முன்னதாக, இந்தப் போட்டியில் அதிரடியில் மிரட்டிய சஞ்சு சாம்சன் 51 பந்துகளில் சதமடித்தார். இதில் 8 சிக்சர்களும் 5 பவுண்டரிகளும் அடக்கம். அவரை விரட்டி வந்த திலக் வர்மாவும் 41 பந்துகளில் சதமடித்தார். இதில் 9 சிக்சர்களும் 6 பவுண்டரிகளும் அடக்கம். இதன்மூலம் நேற்று ஒரேபோட்டியில் பல சாதனைகள் படைக்கப்பட்டன. அவை என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

1. நேற்றைய போட்டியில், இந்திய அணி 283 ரன்களை குவித்தது. இது இந்தியாவின் இரண்டாவது அதிகபட்ச டி20 ஸ்கோராகும். இதற்கு முன் வங்கதேச அணிக்கு எதிராக 297 ரன்கள் எடுத்திருந்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தென்னாப்ரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோராகும் இது பதிவாகி உள்ளது. வெளிநாட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய ஸ்கோர் ஆகவும் இது அமைந்தது.

2. இந்தப் போட்டியில் 284 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணி 148 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ரன்கள் வித்தியாசத்தில் இது இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய வெற்றியாக உள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் மிகப்பெரிய ரன் வித்தியாச தோல்வியாகவும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: இலங்கை: தமிழர்களின் வாக்குகளை கைப்பற்றி சாதித்த ஆளும்கட்சி.. சாத்தியமானது எப்படி? வைகோ கடும் கண்டனம்

3. சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் (2024) அதிக சதம் அடித்த வீரராக சஞ்சு சாம்சன் தனது பெயரைப் பொறித்துள்ளார். அவர், ஒரே ஆண்டில் மூன்று சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். தென்னாப்பிரிக்கா தொடரில் 2 சதங்களைத் தவிர, முன்னதாக வங்கதேசத்திற்கு எதிராகவும் ஒரு சதம் அடித்திருந்தார். இதற்குமுன்பு, நான்கு வீரர்கள் ஒரே ஆண்டில் இரண்டு சர்வதேச டி20 சதங்களை அடித்து இருந்தனர். கோலின் மன்றோ, ஃபில் சால்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய நால்வர் ஒரே ஆண்டில் இரண்டு சதங்களை அடித்துள்ளனர். இதே பட்டியலில் திலக் வர்மாவும் இணைந்துள்ளார். அவரும், தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதங்கள் அடித்திருந்தார்.

4. ஒரே டி20 தொடரில் இரண்டு சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணியின் ஃபில் சால்ட் ஒரே தொடரில் இரண்டு சதங்களை அடித்திருந்தார். சஞ்சு சாம்சனுக்குப் பின் திலக் வர்மாவும் மூன்றாவது வீரரராக இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

5. சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், வெளிநாட்டில் டி20 சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், அதிக முறை டக் அவுட் ஆன இந்திய விக்கெட் கீப்பர் என பல்வேறு சாதனைகளை சஞ்சு சாம்சன் செய்து இருக்கிறார்.

இதையும் படிக்க: இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆளும்கட்சி.. ராஜபக்சே கட்சியுடன் ஒப்பீடு!

6. தென்னாப்பிரிக்க தொடரில் 4 போட்டிகளில் விளையாடி திலக் வர்மா 280 ரன்களைக் குவித்தார். இதன்மூலம், இருதரப்பு டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் இதுவே ஆகும். இதற்குமுன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருதரப்பு டி20 தொடரில் 231 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

7. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முழுநேர உறுப்பினராக இருக்கும் எந்தவொரு அணியும் ஒரே டி20 இன்னிங்ஸில் இரண்டு சதங்களை அடித்ததில்லை. முதன்முறையாக இந்திய அணி அந்த சாதனையை செய்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் சதம் அடித்தனர்.

8. சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இருவரும் சதம் அடித்ததுடன், இரண்டாவது விக்கெட்டுக்கு 210 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் மிகப்பெரிய இணை சேர்த்த ரன்களாக சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மாவின் ரன்கள் பதிவாகியுள்ளது.

9. இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஒரே போட்டியில் இந்திய அணி 23 சிக்ஸர்களை அடித்து இருந்தது.

10. இந்திய அணி ஒரே ஆண்டில் ஏழு சதங்கள் அடித்த அணி என்ற சாதனையை செய்துள்ளது. சஞ்சு சாம்சன் (3), திலக் வர்மா (2), ரோகித் சர்மா (1), அபிஷேக் வர்மா (1) ஆகியோர் இந்த ஆண்டில் சதம் அடித்த இந்திய வீரர்கள் ஆவர்.

இதையும் படிக்க: வாழைப்பழத்தைப் பார்த்தாலே பயம்.. ஊழியர்களிடம் கடும் உத்தரவு.. ஸ்வீடன் அமைச்சரின் வெளிவந்த ரகசியம்