இந்திய அணி, ரோகித் சர்மா ட்விட்டர்
கிரிக்கெட்

”எப்படி மீள்வது என தெரியவில்லை” - உலகக்கோப்பை தோல்வி குறித்து முதல் முறையாக மவுனம் கலைத்த ரோகித்!

இந்திய அணியின் தோல்வி குறித்து நீண்ட இடைவெளிக்குப் பின், கேப்டன் ரோகித் சர்மா தன் மவுனத்தைக் கலைத்துள்ளார்.

Prakash J

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் கோப்பையை இழந்தது தற்போதுவரை விமர்சனமாகவே இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தபடியே உள்ளன. இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வி குறித்து தன் மவுனத்தைக் கலைத்துள்ளார், கேப்டன் ரோகித் சர்மா.

Rohit Sharma

இதுகுறித்து அவர், “முதல் சில நாட்களிலிருந்து எப்படி மீள்வது என்று எனக்குத் தெரியவில்லை. என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. என் குடும்பத்தினரும் என் நண்பர்களும் எனக்கு துணையாக தொடர்ந்து வந்தார்கள். என்னை சுற்றி இருந்த விஷயங்களை அவர்கள் எளிமையாக வைத்திருந்து பார்த்துக் கொண்டார்கள். இது கொஞ்சம் பயனுள்ளதாக இருந்தது. ஆனாலும் ஏற்பட்ட தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று. இதைத் தாண்டி வருவது, அதை நகர்த்துவது அவ்வளவு எளிதாக இல்லை. வாழ்க்கை நகர்கிறது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும், நேர்மையாக எடுத்துச் செல்ல வேண்டும். தோல்வி கொடுத்த மனவலியிலிருந்து வெளியே வர வேண்டும்.

இதையும் படிக்க: மக்களவையில் ஊடுருவிய இருவர்.. மடக்கிப்பிடித்த எம்.பி.க்கள்... பரபரப்புக்கு மத்தியில் நடந்தது என்ன?

நான் 50 ஓவர் உலகக் கோப்பையை பார்த்து வளர்ந்தவன். எனக்கு அதுதான் மிகப்பெரிய விஷயமும் பரிசும்கூட. நாங்கள் இதற்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தோம். இறுதியில் நாங்கள் அதை அடைய முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. நிச்சயம் இது யாரையும் ஏமாற்றம் அடைய வைக்கும், விரக்தி அடைய வைக்கும். எங்கள் தரப்பில் என்ன தவறு நடந்தது என்று யாராவது கேட்டால், நாங்கள் 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றோம்.

அந்த 10 ஆட்டங்களிலும் தவறுகள் இருந்தது. தவறுகள் செய்யாத முழுமையான ஆட்டமே கிடையாது. முழுமைக்கு நெருக்கமான ஆட்டத்தைதான் எப்பொழுதும் விளையாட முடியும். இறுதிப்போட்டியில் என்ன தவறு செய்தோம் என்று கேட்டால், எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். எல்லா நேரங்களிலும் நமது திட்டப்படி போட்டி அமையாது. இந்திய அணியைப் நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

இதையும் படிக்க: ஷூவில் இடம்பெற்ற வாசகம்.. ஐசிசி எதிர்ப்புக்கு ஆஸ்திரேலிய வீரர் பதில்!

உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடினோம். ஆனால் ஒவ்வோர் உலகக்கோப்பையிலும் இப்படி விளையாட முடியாது. இறுதிப்போட்டிக்குப் பிறகு இந்திய அணி விளையாடும் விதம் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். தோல்வியிலிந்து மீண்டுவர, எங்கு சென்றாலும் ரசிகர்கள் அங்குவந்து இந்திய அணியைப் பாராட்டவும் செய்தனர். உலகக்கோப்பை தொடர் நடந்த அந்த ஒன்றரை மாதங்களும் ரசிகர்கள் எங்களுக்குக் கொடுத்த ஆதரவைப் பாராட்ட வேண்டும். ஆனால், எப்போதும் தோல்வியை நினைத்துக்கொண்டே இருந்தால், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் திரும்பாது. இந்த நெருக்கடியான சூழ்நிலையில், மக்களின் ஆதரவு மட்டுமே உறுதுணையாக இருந்தது. எனவே, திரும்பிச்சென்று மீண்டும் வேலை செய்யத் தொடங்கவும், மற்றொரு இறுதிப்பரிசைத் தேடவும் இது உந்துதலைத் தருகிறது” என அதில் கூறியுள்ளார்.

ரோகித் சர்மா

இந்தியாவில் ஒன்றரை மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், இந்திய அணி அனைத்துப் போட்டிகளில் வெற்றிபெற்று ரசிகர்களுக்கு விருந்து படைத்துவந்த நிலையில், இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து கோப்பையைப் பறிகொடுத்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

இதையும் படிக்க: ராஜஸ்தான்: முதல்முறை எம்.எல்.ஏ.. முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பஜன்லால் சர்மா; பின்னணி என்ன?