வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய மகளிர் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்குபெற்று விளையாடியது. டி20 தொடரை 2-1 என இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், ஒரு நாள் தொடரில் வங்கதேச அணி கம்பேக் கொடுத்தது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணியும், 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்று போட்டி விறுவிறுப்பாக மாறியது.
இந்நிலையில், ஒருநாள் தொடரின் வெற்றியை உறுதிசெய்யும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் சேர்த்தது. 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய வங்கதேச அணி அதிர்ச்சி கொடுத்தது. பின்னர் 3வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த தீயோல் மற்றும் ஸ்மிரிதி மந்தனா இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி, இந்திய அணியை வெற்றிக்கு அருகாமையில் கொண்டு சேர்த்தது. ஆனால் சிறப்பாக விளையாடிய ஸ்மிரிதியை 59 ரன்னிலும், தீயோலை 77 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றிய வங்கதேச அணி மீண்டும் போட்டிக்குள் வந்தது. அதற்கு பிறகு 25 ரன்னில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து போட்டியை தலைகீழாக மாற்றியது.
இறுதியில் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 5 பந்துக்கு 2 ரன்கள் தேவையும், வங்கதேச அணி வெற்றிபெற 1 விக்கெட்டும் தேவை இருந்தது. அப்போது சிறந்த ஃபார்முடன் களத்தில் இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் தேவையில்லாத இடத்தில் 1 ரன் எடுத்து டெய்ல் எண்டருக்கு பேட்டிங் கொடுத்தார். அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட வங்கதேச அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மருஃபா அக்தெர் விக்கெட்டை எடுத்து போட்டியை சமனுக்கு எடுத்து சென்றார். வெற்றிபெற வேண்டிய இடத்திலிருந்து போட்டியை கோட்டை விட்ட இந்திய அணி, 1-1 என தொடரை வங்கதேசத்தோடு பகிர்ந்து கொண்டது.
இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் 14 ரன்னில் இருந்த போது, வங்கதேச ஸ்பின்னர் நஹிதா அக்டர் LBW விக்கெட்டுக்கு அப்பீல் செய்தார். பவுலர் கத்தியவுடன் அம்பயர் விக்கெட்டுக்கு கையை உயர்த்தினார். ஆனால் இதை கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்காத கவுர், பந்து பேட்டில் பட்டு சென்றதாக அம்பயரிடம் கத்தினார். அதுமட்டுமல்லாமல் பேட்டை கொண்டு ஸ்டம்பை அடித்து விட்டு கத்திக்கொண்டே வெளியேறினார். அதற்கு பிறகு தொடர்ச்சியான இரண்டு ரன் அவுட்டுகள் என இந்திய அணி சொதப்ப, போட்டி அந்த பக்கமா இந்த பக்கமா என மாறியது. அப்போது மீண்டும் ஒரு LBW விக்கெட் அமன்ஜோத் கவுருக்கு வழங்கப்பட்டது. அவரும் அம்பயரின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெளியேறினார்.
பின்னர் போட்டிக்கு பிறகு பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், போட்டி நடுவர்கள் குறித்து ஆவேசமாக பேசினார். அவர் பேசுகையில், “இந்த போட்டியிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். முக்கியமாக போட்டியை தாண்டி அம்பயரிங் செய்த விதம் எங்களை அதிகமாக ஆச்சரியப்படுத்தியது. அடுத்தமுறை வங்கதேசம் வரும்போது இது போன்ற அம்பயரிங்களுக்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று தயாராகிவிட்டு வருவோம். தீயோல் மற்றும் ஜெமிமா இருவரும் சிறப்பாக விளையாடினர். வங்கதேச வீரர்கள் சரியான நேரத்தில் ரன்களை எடுத்துவந்தனர். இரண்டு அணியினருக்கும் ரசிகர்கள் ஆதரவாக இருந்தனர். எல்லாவற்றையும் தாண்டி மோசமான அம்பயரிங்கும், முடிவுகளும் எங்களை ஏமாற்றம் அடைய வைத்தது” என்று கூறினார்.
க்றிக்பஸ் உடன் பேசியிருக்கும் போட்டி அதிகாரி ஒருவர் கூறுகையில், “களத்தில் நடந்த சம்பவத்திற்காக (ஸ்டம்பை அடித்து நொறுக்கியது) போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமும், அதே போல போட்டிக்கு பிறகு பேசியபோது அம்பயர்கள் குறித்து பேசியதற்காக 25 சதவீதமும் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் களத்தில் மோசமாக நடந்து கொண்ட விதத்திற்காக 2 டீமெரிட் (Demerit) புள்ளிகளையும், போட்டிமுடிந்த பிறகு நடுவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்காக ஒரு டிமெரிட் புள்ளியையும் பெறுவார் என்று தெரிவித்துள்ளார்.