Suryakumar Yadav Twitter
கிரிக்கெட்

3 டக் அவுட்டுக்கு பிறகு அரைசதம் அடித்த சூர்யா! எல்லாருமே அசத்தல் பேட்டிங்.. இந்திய அணி வெற்றி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2023 உலகக்கோப்பைக்கு முன் நடைபெறும் நிலையில், டி20 போட்டிகள் உலகக்கோப்பைக்கு பிறகு நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இந்திய அணியில் ருதுராஜ் ஹெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய முகமது ஷமி!

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு முகமது ஷமி தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். மென் இன் ஃபார்மில் ஜொலித்து வரும் மிட்சல் மார்ஸை ஒரு அற்புதமான அவுட்ஸ்விங் டெலிவரியில் 4 ரன்னில் வெளியேற்றினார் ஷமி. அதற்கு பிறகு பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் ஆஸ்திரேலிய அணியை அழுத்தத்திலேயே வைத்திருந்தனர். ஆனால் 9வது ஓவரில் டேவிட் வார்னர் அடித்து கைக்கு வந்த கேட்ச்சை ஸ்ரேயாஸ் ஐயர் கோட்டைவிட, ஆஸ்திரேலிய அணி ரன்களை விரட்ட ஆரம்பித்தது.

Shami - Warner

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட டேவிட் வார்னர் தன் மீதிருந்த குறையை போக்கும் வகையில் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். 2வது விக்கெட்டுக்கு 106 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்த வார்னர் மற்றும் ஸ்மித் ஜோடி ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. பின்னர் களத்திற்கு வந்த லபுசனே, காம்ரான் க்ரீன் என அனவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி பெரிய இடைவெளி இல்லாமல் விக்கெட்டுகளை வீழ்த்தி கொண்டே இருந்தார்.

முகமது ஷமி

இந்தியாவில் தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியை விளையாடும் இளம் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலீஸ் கடைசியில் களமிறங்கி 45 ரன்கள் எடுக்க 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 276 ரன்கள் சேர்த்தது. பவுலிங்கை பொறுத்தவரையில் முகமது ஷமி 10 ஓவரில் 51 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

141 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட ருதுராஜ்-கில்!

277 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கில் மற்றும் ருதுராஜ் இருவரும் வலுவான தொடக்கத்தை அமைத்தனர். ருதுராஜ் ஒருபுறம் நின்று விளையாட ப்ரைம் ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். எதிர்கொண்ட அனைத்து பவுலர்களையும் பவுண்டரிக்கு விரட்டிய கில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடக்கத்தில் செட்டில் ஆகிவிட்டு பின்னர் அதிரடிக்கு திரும்பிய ருதுராஜ், கில்லை தொடர்ந்து அரைசதம் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி இந்தியாவிற்கு நல்ல சேஸிங்கை ஏற்படுத்தி கொடுத்தது.

Ruturaj - Gill

சிறப்பாக பந்துவீசி ருதுராஜை LBW-ல் வெளியேற்றிய ஆடம் ஷாம்பா, அடுத்த 10 ரன்களுக்குள் சுப்மன் கில்லையும் வெளியேற்ற ஆஸ்திரேலியா ஆட்டத்திற்குள் வந்தது. உடன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் இருவரும் வெளியேற, இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற எண்ணம் அதிகமானது. பின்னர் கைக்கோர்த்த கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 5-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு அருகாமைக்கு அழைத்து சென்றது. சிறப்பாக விளையாடி தன்னுடைய 3வது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ்.

KL Rahul

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் மூன்று போட்டிகளிலும் 3 முறை 0 ரன்னில் வெளியேறி விமர்சனத்துக்கு ஆளானார் சூர்யகுமார். இந்நிலையில் அந்த அணிக்கு எதிராகவே அரைசதம் அடித்து இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார். மறுமுனையில் நிலைத்து நின்ற கேப்டன் கேஎல் ராகுல் அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். முடிவில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் இந்தூர் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது.