india womens team twitter
கிரிக்கெட்

அடுத்தடுத்து 3 பேர் டக் அவுட்.. 1 ரன்னுக்குள் 4 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய மகளிர் அணி!

1 ரன்னுக்குள் 4 விக்கெட்களை இழந்து 2வது போட்டியிலும் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றுள்ளது.

Prakash J

வங்களாதேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, அங்கு டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

india vs bangladesh team

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர். மந்தனா 13 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களில் போல்டாக, ஷபாலி வர்மா 14 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களில் கேட்சானார்.

bangladesh players

ரோட்ரிக்ஸ் தன் பங்குக்கு 8 ரன்கள் எடுக்க, கேப்டன் ஹர்மன்பிரீத் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டானார். பின்னர் வந்த வீராங்கனைகளும் நிலைத்து நின்று ரன்களை எடுக்காததால் இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 95 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்காளதேச மகளிர் அணி தரப்பில் சுல்தானா கதுன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச மகளிர் அணியின் தொடக்க பேட்டர்கள் இருவரும் தலா 5 ரன்களில் வெளியேறினர். இதனால், அந்த அணி ஆரம்பத்திலேயே தத்தளித்தது. அவ்வணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான நிகர் சுல்தானா மட்டும் இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடித்து 38 ரன்கள் எடுத்தார். அவருக்குப் பின் வந்த 3 வீராங்கனைகளும் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்ட, அவ்வணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. அப்போது அணியின் ரன் எண்ணிக்கை 86 ஆக இருந்தது. 7 பந்துகளுக்கு 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அவர்களது வசம் 4 விக்கெட்கள் கையில் இருந்தன. இந்தச் சூழலில்தான் கடைசி ஓவரை வீசிய ஷபாலி வர்மா, 4 விக்கெட்களை அறுவடை செய்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். முதல் பந்தில் ரபியா கதுன் ரன் அவுட் முறையில் டக் அவுட்டாய் வீழ, 2வது பந்தில் நகிடா அக்தர் கேட்சானார்.

india team

தொடர்ந்து ஃபகிமா கதுனை 4வது பந்திலும், மர்ஃபா அக்தரை கடைசிப் பந்திலும் வெளியேற்றினார். அவர்கள் இருவரையும் டக் அவுட் முறையில் வெளியேற்றினார். அவரது பந்துவீச்சில் கடைசியில் களம் கண்ட 3 பேட்டர்களும் டக் அவுட் ஆகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அந்த அணி 1 ரன்னை எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் இறுதிவரை களத்தில் நின்ற சுல்தானா கதுனும் ரன் எடுக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியிலும் இந்தியா வென்றதை அடுத்து தொடரைக் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது.