ind vs ire pt web
கிரிக்கெட்

‘ராஜாவாக வந்த பும்ரா’ முதல் போட்டியிலேயே மிரட்டல்; குறுக்கிட்ட மழை.. நூலிழையில் தப்பித்த இந்திய அணி!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றுள்ளது.

Angeshwar G

அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணிக்கு காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தலைமை தாங்குகிறார்.

தொடரின் முதல் ஆட்டம் டப்ளின் நகரில் உள்ள மலாஹைடில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அயர்லாந்தின் தொடக்க ஆட்டக்காரர் பால்பிரின் மற்றும் டக்கர் முதல் ஓவரிலேயே தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் ஓவரின் இரண்டாவது பந்தை பும்ரா தனது ட்ரேட்மார்க் அவுட்சைட் ஆஃப் ஸ்விங்காக வீச அது இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டெம்பைத் தாக்கியது. நான்காவது பந்திலும் விக்கெட் விழ பும்ரா தான் மீண்டு வந்துள்ளதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

பின் வந்த அயர்லாந்து வீரர்களில் மெக்கார்தி மற்றும் கேம்பர் தவிர அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மெக்கார்தி 51 ரன்களையும் கேம்பர் 39 ரன்களையும் எடுத்திருந்தனர். சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ப்ரஷித் கிருஷ்ணா, பும்ரா, ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களை வீழ்த்த அர்ஷ்தீப் சிங் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். தனது முதல் டி20 போட்டியை விளையாடியுள்ள ப்ரஷித் கிருஷ்ணா முதல் போட்டியிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தி கவனம் ஈர்த்துள்ளார்.

140 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் அதிரடி தொடக்கம் கொடுத்த ஜெய்ஸ்வால் 24 ரன்களை எடுத்து வெளியேற பின் வந்த திலக் வர்மா முதல்பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து 47 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லூயில் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்ட நாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.

ஏறத்தாழ ஒரு வருட இடைவெளிக்கு பின் மீண்டும் விளையாடும் பும்ரா முதல் ஆட்டத்திலேயே, அதிலும் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றது அவருக்கு மிக உற்சாகத்தைக் கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம் அவரை ரசிகர்களும் கொண்டாட தவர வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த டி20 போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்க உள்ளது.