ShubmanGill twitter
கிரிக்கெட்

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: களமிறக்கப்பட்ட ஷுப்மன் கில்.. முதல் விக்கெட்டை சாய்த்தார் முகமது சிராஜ்

ஷுப்மன் கில் இன்றைய போட்டியில் களமிறங்கி இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

Prakash J

13வது ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரின் 12வது லீக் போட்டி, இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி நடைபெறுகிறது. இதில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் களம் கண்டு வருகின்றன. இரு அணிகளுமே முந்தைய ஆட்டங்களில் வெற்றிபெற்று சம பலத்துடன் உள்ளன. இதில் இந்திய அணி மட்டும் ரன் ரேட்டில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 4வது இடத்தில் உள்ளது.

ind vs pak captains

சம பலத்துடன் இரு அணிகளும் இன்று மோத இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து வருகிறது. அதேநேரத்தில், முதல் இரண்டு போட்டிகளில் தொடக்க வீரராகக் களம் இறங்கி விளையாடிய இஷான் கிஷனுக்கு, இந்தப் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு உள்ளது. அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க: Israel போட்ட உத்தரவு... Gaza-வில் நடக்கும் கொடூரம்..!

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட சென்னை வந்திருந்தபோது (அக்.8ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில்) ஷுப்மன் கில்லுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. ஷுப்மன் கில் சென்னையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

rohit, ShubmanGill

இந்தச் சூழலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஷுப்மன் கில் கடந்த 12ஆம் தேதி அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார். அத்துடன், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்களுடனும் அவர் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். அதேநேரத்தில் இன்றைய போட்டியில் கில் விளையாடுவாரா என சந்தேகம் இருந்தது. ரோகித் சர்மாவும், இன்றையப் போட்டியில், கில் 90 சதவிகிதம் விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, இன்றைய போட்டியில் அவர் களமிறக்கப்பட்டுள்ளார். ஷுப்மன் கில், இந்தப் போட்டியில் களமிறங்கியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் அப்துல்லா சபிக்யூ மற்றும் இமாம் உல் ஹாக் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பும்ரா கட்டுக்கோப்பாக வீசி ரன்களை மிகவும் கச்சிதமாக வழங்கினார். ரன்களை விட்டுக் கொடுத்தாலும் நிலைத்து ஆடிய ஜோடியை பிரித்தார் முகமது சிராஜ். 8வது ஓவரின் கடைசி பந்தில் முதல் விக்கெட்டை சாய்த்தார் சிராஜ். பாகிஸ்தான் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்தது. தொடர்ச்சியாக பவுண்டரிகளை விட்டுக் கொடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 13 ஆவது ஓவரில் இமாம் உல் ஹாக் விக்கெட்டை சாய்த்தார். இமாம் 38 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தார்.