தோனி - ரோகித் Cricinfo
கிரிக்கெட்

விக்கெட் வேட்டையாடிய சிராஜ்-பும்ரா! 1-1 என முடிந்த தொடர்! தோனிக்கு பின் ரோகித் படைத்த சாதனை!

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், தொடரை சமன்செய்யும் முடிவில் இரண்டாவது போட்டியில் களமிறங்கியது இந்திய அணி.

பும்ரா 6.. சிராஜ் 6..! அசத்திய இந்திய பவுலர்கள்!

முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தபோது, “பும்ரா ஒருவரை மட்டும் நம்பி எங்களால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது” என்று மற்ற பந்துவீச்சாளர்கள் பங்களிக்காதது குறித்து விரக்தியில் கூறியிருந்தார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா.

siraj

இந்நிலையில், தொடங்கப்பட்ட இரண்டாவது போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் விக்கெட் வேட்டை நடத்தினார். 9 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ், தென்னாப்பிரிக்காவை 55 ரன்னில் சுருட்டி எறிந்தார். முதல் இன்னிங்ஸில் சிராஜ் 6 விக்கெட் என்றால், இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கிய பும்ரா அவருடைய 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இரண்டு இந்திய பவுலர்கள் ஒன்றாக 6 விக்கெட்டுகள் எடுப்பது இதுவே இரண்டாவது முறை. இதற்கு முன் புவனேஷ்குமார், இஷாந்த் சர்மா கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது பும்ரா மற்றும் சிராஜ் அசத்தியுள்ளனர்.

bumrah

இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களின் மேஜிக்கால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியை வெற்றிபெற்ற இந்திய அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்செய்துள்ளது.

தோனிக்கு பிறகு தொடரை சமன்செய்த ரோகித்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்திய அணி சமன்செய்திருக்கும் நிலையில், தோனிக்கு பிறகு தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை சமன்செய்யும் 2வது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோகித் சர்மா.

dhoni

2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த தோனி தலமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன்செய்தது. இந்நிலையில் 2 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமன்செய்துள்ளது.

rohit sharma

ஒருவேளை இந்த தொடர் 3 அல்லது 4 போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் இந்திய அணி தொடரை வெல்ல நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும் என பல முன்னாள் வீரர்கள் கருத்துதெரிவித்துள்ளனர். தொடர் தொடங்குவதற்கு முன்னர் கூட இந்தியாவால் தொடரை வெல்லாததற்கு அதிக போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடாததே காரணம் என தெரிவித்திருந்தார். எப்படியிருப்பினும் 31 வருட வரலாற்றில் தோனிக்கு பிறகு ரோகித் ஒரு நல்ல கேப்டன் என்ற முத்திரையை பதித்துள்ளார்.