india womens team twitter
கிரிக்கெட்

Ind W- Eng W Test: மகத்தான 3 சாதனைகளைப் படைத்து மகுடம் சூடிய இந்திய மகளிர் அணி!

இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

Prakash J

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி, முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் இழந்தது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் போட்டி, கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி, மும்பை டாக்டர் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 94 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 410 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஒரேநாளில் அதிக ரன் குவித்த மகளிர் அணி என்ற பெருமையைப் பெற்றது இந்திய மகளிர் அணி.

அத்துடன், 1934-க்குப் பின் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரேநாளில் 400 ரன்களுக்கும் மேல் குவித்த இரண்டாவது அணி என்ற வரலாற்றுச் சாதனையை செய்தது இந்திய மகளிர் அணி. சுமார் 88 ஆண்டுகளுக்கு பின் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் அன்று ஒரே அணி 400 ரன்களுக்கு மேல் ரன் குவித்தது பெரும் வரலாற்று சாதனை ஆகும்.

1934-ஆம் ஆண்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 44 ரன்களில் ஆல்அவுட் ஆன நிலையில், அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல்நாளின் முடிவில் 431 ரன்கள் குவித்தது. இதையடுத்து தற்போது இந்திய மகளிர் அணி ஒரே நாளில் 410 ரன்கள் குவித்து சாதனையில் இடம்பிடித்தது.

இதையும் படிக்க: “லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை; தீர்ப்பு எங்களை பாதிக்காது” - சீனா

தவிர, இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தன் அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து மறுநாள் விளையாடிய இந்திய மகளிர் அணி, 428 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும். இதன் முதல் இன்னிங்ஸில் சதீஷ் சுபா (69), ரோட்ரிக்ஸ் (68), யாஷிகா பாட்டியா (66), தீப்தி சர்மா (67) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இதையடுத்து தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 136 ரன்களுக்குச் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ப்ரூண்ட் மட்டும் 59 ரன்கள் எடுத்தார். அந்த அணி, இவ்வளவு குறைந்த ரன்னில் சுருண்டதற்கு முக்கியக் காரணம், இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்துவீச்சே ஆகும். அதிலும், தீப்தி சர்மா 5.3 ஓவர்களில் 4 ஓவர்களை மெய்டனாக்கியதுடன் வெறும் 7 ரன்களை மட்டுமே வழங்கி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய மகளிர் அணி, 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு 478 ரன்கள் (428+186=614-136=478) இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மிகவும் கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் மீண்டும் 131 ரன்களில் சுருண்டது. இதையடுத்து இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்துவீசிய தீப்தி சர்மா 4 விக்கெட்களை அறுவடை செய்தார். இதன்மூலம் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் மொத்தம் 9 விக்கெட்களைக் கைப்பற்றினார். 9 விக்கெட்களைக் கைப்பற்றிய தீப்தி, ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இதையும் படிக்க: அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட மசூதி.. அடிக்கல் நாட்டு விழாவிற்கு மெக்கா இமாம் வருகை?