டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்துவிதமான வடிவங்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்திய அணி, ஐசிசி-ன் புள்ளிவரிசைப்பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து அசத்திவருகிறது. டெஸ்ட் தரவரிசையில் 118 புள்ளிகளுடனும், ஒடிஐ போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 121 புள்ளிகளுடனும், டி20 தரவரிசையில் 265 புள்ளிகளுடனும் முதலிடம் வகிக்கிறது இந்திய அணி. இதன்மூலம் ஒரே நேரத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட் வடிவத்தில் முதலிடத்தை பிடித்திருக்கும் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு பிறகு இந்த சாதனையை படைத்த 2வது அணியாக ஜொலித்து வருகிறது. ஆனால் தென்னாப்பிரிக்காவை விட அதிக நாட்கள் 3 வடிவத்திலும் முதல் அணியாக இந்திய அணி முத்திரைப்பதித்து வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது டி20 போட்டிகளில் அதிகவெற்றிகளை பதிவுசெய்து அசத்தியுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 174 ரன்களை எடுத்த இந்திய அணி, இரண்டாவது பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியை 154 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் அதிக டி20 போட்டிகளில் வெற்றிபெற்று முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
சர்வதேச டி20 வடிவத்தில் இதுவரை 213 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி, 63.84 சதவீத வெற்றிகளுடன் 136 போட்டிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது. அதில் 67 போட்டிகளில் தோல்வி, ஒரு போட்டி டிரா, 3 போட்டிகள் கைவிடப்பட்ட போட்டிகளாகவும் இருக்கின்றன. இதன்மூலம் 226 போட்டிகளில் விளையாடி 135 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளியிருக்கும் இந்திய அணி அதிக டி20 போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் அணியாக மாறியுள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் 200 போட்டிகளில் 102 வெற்றிகளுடன் நியூசிலாந்து, 181 போட்டிகளில் 95 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா, 171 போட்டிகளில் 95 வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்கா, 177 போட்டிகளில் 92 வெற்றிகளுடன் இங்கிலாந்து அணிகளும் நீடிக்கின்றன.